ஆசிய விளையாட்டு விழாவிற்கு இலங்கையிலிருந்து 96 வீரர்கள்

Asian Games 2023

197

சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 96 வீரர்கள் கொண்ட குழு பங்கேற்க உள்ளது. 62 வீரர்களும், 34 வீராங்கனைகளும் உள்ளடங்கிய இந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் 40 விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் இலங்கை வீரர்கள் 20 விளையாட்டு நிகழ்ச்சிகளில் போட்டியிடவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இது தவிர, அதிகாரிகள் உட்பட 57 பேருக்கு இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். அவர்களில் 20 முகாமையாளர்கள், 24 பயிற்சியாளர்கள் 6 பேர் கொண்ட மருத்துவக் குழு மற்றும் 7 தேசிய ஒலிம்பிக் குழு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பணிப்புரைக்கமைய, அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்ற நதிஷா ராமநாயக்க மற்றும் பெண்களுக்கான 800 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்ன ஆகியோரின் பயிற்சியாளர்களையும் ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை அணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நதீஷாவின் பயிற்சியாளர் டபிள்யூ.ஜி.எம் துஷார மற்றும் தருஷியின் பயிற்றுவிப்பாளர் சுசந்த பெர்னாண்டோ ஆகிய இருவரும் இலங்கை அணியுடன் இணையவுள்ளனர்.

அதன்படி, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை அணியில் 153 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு விழாவிற்கு பல பரிந்துரைகளுக்கு மத்தியில், மிகவும் அத்தியாவசியமான அணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை அணிக்கு அனுமதியை வழங்கிய போது அமைச்சருடன் அங்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மஹேசன், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷெமல் பெர்னாண்டோ, தேசிய தெரிவுக்குழுவின் செயலாளர் அர்ஜுன் ரிஷ்யா பெர்னாண்டோ, தேசிய தெரிவுக்குழுவின் அதிகாரி மேஜர் இஷ்னி கட்டுவாங்கொட, தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர் லசித குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சீனாவின் ஹாங்சூ நகரில் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு விழா கடந்த 2020ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<