சர்வதேச T20 கிரிக்கெட்டில் 8 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி T20 போட்டிகளில் அதிசிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவு செய்த வீரராக மலேசியா வீரர் ஷியஸ்ருல் இட்ருஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ICC T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசிய வலய தகுதி சுற்றுக்கான B பிரிவு போட்டிகள் புதன்கிழமை (26) மலேசியாவின் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது. இதில் பூட்டான், சீனா, மலேசியா, மியான்மார், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் போட்டியில் சீனா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சீனா அணி, 11.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
சீனா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முதல் கடைசி வீரர் வரை, ஒருவர் கூட இரட்டை இலக்க ஓட்டங்களை எடுக்காமல், அனைவரும் ஆட்டம் இழந்தனர். இதில் ஆறு வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறினர்
மலேசியா அணிக்காக அபாரமாக பந்துவீசிய ஷியஸ்ருல் இட்ருஸ் 4 ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவருடன் வெறும் 8 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். குறித்த 7 விக்கெட்டுகளையும் ஸ்டம்புகளை தகர்த்து க்ளீன் போல்ட் முறையில் எடுத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
- லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடர் டிக்கெட் விற்பனை ஆரம்பம்
- குழந்தைகளின் உயிர் காப்பிற்காக கைகொடுக்கும் LPL தொடர்
- அப்துல்லா சபீக்கின் இரட்டைச்சதத்தோடு வலுவான நிலையில் பாகிஸ்தான்
இதன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டின் ஆடவர் பிரிவில், ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும், T20i போட்டிகளில் அதிசிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவு செய்த வீரராகவும் ஷியஸ்ருல் இட்ருஸ் இடம்பிடித்தார்.
சர்வதேச T20 கிரிக்கெட்டில், ஒரு போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நைஜீரியாவின் பீட்டர் அஹோ (6/5), இந்தியாவின் தீபக் சஹார் (6/7), உகண்டாவின் தினேஷ் நக்ரனி (6/6), அஜந்த மெண்டிஸ் (6/8) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே, 24 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மலேசியா அணி, 4.5 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<