இலங்கை டெஸ்ட் அணிக் குழாத்தில் மீண்டும் பெதும் நிஸ்ஸங்க

680

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலி நகரில் ஆரம்பமாகவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் 16 பேர் அடங்கிய இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>அவிஷ்கவின் அபார சதத்துடன் இலங்கை A அணிக்கு முதல் வெற்றி

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கே ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புதிய பருவத்திற்காக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றது.

அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடும் இலங்கை குழாமே அறிவிக்கப்பட்டிருப்பதோடு இதில் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டியொன்றில் ஆடிய பெதும் நிஸ்ஸங்க இணைக்கப்பட்டிருக்கின்றார்.

பெதும் நிஸ்ஸங்க இலங்கை அணிக்காக அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு இரண்டு சதங்களையும் விளாசியிருந்தார். பெதும் நிஸ்ஸங்கவின் இந்த சிறந்த ஆட்டமே அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் உள்வாங்கப்பட காரணமாக அமைகின்றது.

இதேவேளை அயர்லாந்து டெஸ்ட் தொடரில் விளையாடாது போயிருந்த கசுன் ராஜித இலங்கை டெஸ்ட் குழாத்திற்குள் மீண்டிருப்பதோடு லசித் எம்புல்தெனிய, அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

>>பல சாதனைகளுடன் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி

அசித்த பெர்னாண்டோ இல்லாத நிலையில் அவரின் இடத்தினை இலங்கை டெஸ்ட் குழாத்தில் டில்சான் மதுசங்க பிரதியீடு செய்கின்றார். டில்சான் மதுசங்கவும் அண்மையில் தென்னாபிரிக்க A மற்றும் இலங்கை அணியின் ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் என்பவற்றில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இளம் சுழல்வீரர் பிரவீன் ஜயவிக்ரம, பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சுழலில் பிரகாசித்த அறிமுக சுழல்வீரர் லக்ஷித மானசிங்க ஆகியோரும் இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை டெஸ்ட் குழாம் (முதல் போட்டி)

திமுத் கருணாரட்ன து(தலைவர்), நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, பிரவீன் ஜயவிக்ரம, கசுன் ராஜித, டில்சான் மதுசங்க, விஷ்வ பெர்னாண்டோ, லக்ஷித மானசிங்க 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<