சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்த தொடருக்கான பயிற்சிப்போட்டியொன்று நாளை (11) செவ்வாய்க்கிழமை ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>> சாதனை வெற்றியோடு உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் சம்பியனான இலங்கை
குறித்த இந்தப் பயிற்சிப்போட்டிக்கான 14 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், முதற்தர போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்துவரும் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மொஹமட் சிராஸ் இதுவரையில் 37 முதற்தர போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 2019ம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்க தொடருக்கான இலங்கை குழாத்திலும் இடம்பெற்றிருந்தார். தற்போது இவர் இலங்கை A மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருகின்றார்.
இலங்கை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ள பயிற்சிப்போட்டிக்கான குழாத்தின் தலைவராக கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், தேசிய அணி வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, ஓசத பெர்னாண்டோ மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்குறித்த அனுபவ வீரர்களுடன் அஹான் விக்ரமசிங்க, நிபுன் தனன்ஜய, நுவனிது பெர்னாண்டோ, லக்சித மானசிங்க, சசிக டுல்ஷான், கவீஷ அஞ்சுல மற்றும் அசங்க மனோஜ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர்
நிரோஷன் டிக்வெல்ல, ஓசத பெர்னாண்டோ, சந்துன் வீரகொடி, கமிந்து மெண்டிஸ், அஹான் விக்ரமசிங்க, நிபுன் தனன்ஜய, நுவனிது பெர்னாண்டோ, லக்சித மானசிங்க, பிரவீன் ஜயவிக்ரம, சசிக டுல்ஷான், கவீஷ அஞ்சுல, மிலான் ரத்நாயக்க, அசங்க மனோஜ், மொஹமட் சிராஸ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>