மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றது.
ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் சுபர் சிக்ஸ் போட்டியில் தோல்வியினை தழுவியதனை அடுத்தே இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தினை வென்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டுக்கான (2023) ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிருக்கின்றது.
CPL தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு
உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிய சுபர் சிக்ஸ் போட்டி இன்று (01) நடைபெற்றிருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே சுபர் சிக்ஸ் சுற்றுக்காக புள்ளிகளை பெறாத நிலையில் அவர்களின் உலகக் கிண்ண வாய்ப்பினை தக்க வைக்க அவர்கள் ஸ்கொட்லாந்துடன் கட்டாய வெற்றியினை பெற வேண்டிய நிலையொன்று காணப்பட்டது.
ஹராரே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்கொட்லாந்து மூலம் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியானது 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 181 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 45 ஓட்டங்களை எடுத்ததோடு, ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் பிரண்டன் மெக்குல்லன் 3 விக்கெட்டுக்களையும், கிறிஸ் சோலே, மார்க் வாட் மற்றும் கிறிஸ் கீரிவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 182 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணியானது 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்கள் எடுத்து போட்டியின் வெற்றி இலக்கை அடைந்தது. ஸ்கொட்லாந்து அணியின் வெற்றியை உறுதி செய்த மெதிவ் குரோஸ் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை எடுத்ததோடு ஏற்கனவே பந்துவீச்சில் பிரகாசித்த பிரண்டன் மெக்குலன் இம்முறை துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து 69 ஓட்டங்கள் பெற்றார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெபார்ட், ஜேசன் ஹோல்டர் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.
ஸ்கொட்லாந்து மோதலுக்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளிடம் அதிர்ச்சி தோல்வியினைத் சந்தித்திருந்தது மேற்கிந்திய தீவுகள் அணியின் உலகக் கிண்ண வாய்ப்பில் முன்னதாக பின்னடைவு ஒன்றை ஏற்படுத்தியதோடு, தற்போது சுபர் சிக்ஸ் தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற போதும் அவர்களுக்கு முதல் இரண்டு நிலைகளிலும் காணப்படும் அணிகளை புள்ளிகள் அடிப்படையில் நெருங்க முடியாமல் இருப்பதே ஒருநாள் உலகக் கிண்ண வாய்ப்பு இல்லாமல் போவதற்கு காரணமாக அமைகின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<