ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார நீக்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (30) வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுபர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியின் போது லஹிரு குமாரவின் இடுப்பு பகுதியில் உபாதை ஏற்பட்டது.
>>CPL தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு
முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டினை கைப்பற்றிய லஹிரு குமார, அதே ஓவரின் போது பந்துவீசுவதற்கு தடுமாறினார். இதனைத்தொடர்ந்து களத்திலிருந்து வெளியேறிய இவர், மீண்டும் ஒரு பந்து ஓவரை வீசியிருந்ததுடன் பெவிலியன் திரும்பினார். பாதியில் வெளியேறிய இவர், மீண்டும் பந்துவீசுவதற்கு மைதானத்துக்கு வரவில்லை.
இந்தநிலையில் லஹிரு குமாரவுக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உபாதை உறுதிசெய்யப்பட்டு அவர் முழுமையாக தொடரிலிருந்து நீக்கப்படுகின்றார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எனவே மீண்டும் நாடு திரும்பவுள்ள இவர், தன்னுடைய உபாதையிலிருந்து குணமடைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.
>>WATCH – ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக தடுமாறியது ஏன்? கூறும் பெதும் நிஸ்ஸங்க!
லஹிரு குமார அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் சகலதுறை வீரர் சஹான் ஆராச்சிகே முதன்முறையாக இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான தொடரில் பிரகாசித்திருந்ததுடன், தற்போது மேலதிக வீரராக ஜிம்பாப்வே சென்று இலங்கை அணியுடன் உள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், இவருடன் தற்போது லஹிரு குமாரவும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<