ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ளார்.
உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் முதல் போட்டிக்கு முன்னர் பயிற்சிகளில் ஈடுபடும் போது துஷ்மந்த சமீரவின் தோற்பட்டை பகுதியில் உபாதை ஏற்பட்டது.
>>ZIM-AFRO T10 தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தீக்ஷன, பானுக<<
குறித்த உபாதையிலிருந்து துஷ்மந்த சமீர குணமடைந்துவரும் போதும், அவர் உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் சுபர் சிக்ஸ் சுற்றில் விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை கொண்டிருக்க மாட்டார் என இலங்கை கிரிக்கெ சபை தெரிவித்துள்ளது.
எனவே உலகக்கிண்ண தகுதிகாண் தொடருக்கான குழாத்திலிருந்து துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ளதுடன், அவர் நாட்டுக்கு திரும்பி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் உள்ள உயர் செயற்திறன் மையத்தில் உபாதையிலிருந்து குணமடைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.
துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். டில்ஷான் மதுசங்க இலங்கையில் நடைபெற்ற தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான தொடரில் பந்துவீச்சில் பிரகாசித்திருந்தார்.
ஏற்கனவே மேலதிக வீரர்களில் ஒருவராக ஜிம்பாப்வே சென்றிருந்த டில்ஷான் மதுசங்க, இலங்கை அணியுடன் இணைந்து சுபர் சிக்ஸ் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<