ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் ”சுபர் 6” சுற்றுத் தொடரில் விளையாடும் ஆறு அணிகளும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
>> உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் உலக சாதனை படைத்த வனிந்து ஹஸரங்க
ஜிம்பாப்வேயில் ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த சுற்றுத் தொடரில் மொத்தம் 10 அணிகள் குழு A மற்றும் குழு B இல் தலா 5 அணிகள் வீதமாக போட்டியிட்டு வரும் நிலையில், தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கான குழுநிலைப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்றைய போட்டிகளின் அடிப்படையில் ஜிம்பாப்பே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் குழு A இலிருந்து சுபர் 6 சுற்றுக்கு தெரிவாகுவதோடு, இன்று நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இலங்கை, ஸ்கொட்லாந்து மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் குழு B இலிருந்து சுபர் 6 சுற்றுக்கு தெரிவாகியிருக்கின்றன.
இந்த நிலையில் நடைபெற்ற ஏனைய குழுநிலை போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் ஐக்கிய அமெரிக்கா, நேபாளம், அயர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இருந்து வெளியேறுவதோடு, இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பினையும் இழக்கின்றன.
>> அமெரிக்கா வீரருக்கு பந்துவீச தடை விதித்தது ICC
மறுமுனையில் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் குழுநிலைப் போட்டிகளை அடுத்து சுபர் 6 சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதோடு குறித்த சுபர் 6 சுற்றில், இரு குழுக்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிகள் ஏனைய குழுவில் இருக்கும் அணிகளுடன் தலா ஒரு போட்டி வீதம் ஆடவிருக்கின்றன. அதாவது குழு A இல் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிகள் குழு B இல் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிகளுடன் சுபர் 6 சுற்றில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் சுபர் 6 சுற்றில் இருந்து இரு அணிகள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகுவதோடு குறித்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடும் எஞ்சிய இரண்டு அணிகளாக மாறவிருக்கின்றன.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<