அயர்லாந்துக்கு எதிராக வெற்றி ஓட்டத்தை தொடருமா இலங்கை?

816

ICC உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி தொடரில் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற நிலையில் அடுத்ததாக அயர்லாந்து கிரிக்கெட் அணியை புலவாயோ நகரில் நாளை (25) எதிர்கொள்ளவிருக்கின்றது.

>>வனிந்துவின் சாதனைப் பந்துவீச்சோடு இலங்கை மீண்டும் அசத்தல் வெற்றி

இந்த நிலையில் அயர்லாந்து – இலங்கை அணிகள் இடையிலான உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் போட்டியின் முன்னோட்டத்தினை இங்கு பார்வையிடுவோம்.

இலங்கை அயர்லாந்து கடந்தகால போட்டிகள்

அயர்லாந்து டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடு என்ற போதும் இதுவரை அந்த நாட்டு அணியுடன் இலங்கை 04 ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்றது. குறித்த போட்டிகள் அனைத்திலும் இலங்கை கிரிக்கெட் அணியே வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. இது இலங்கை அணியின் ஆதிக்கம் அயர்லாந்து அணியுடனான போட்டியில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது என்பதனைக் காட்டுகின்றது.

இலங்கை அணி

இலங்கை அணியினைப் பொறுத்தவரை தற்போது உலகக் கிண்ண தகுதிகாண் தொடரினை வெற்றி கொள்ளும் அணிகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணியினைப் பொறுத்தவரை தொடரில் தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான முறையில் பந்துவீசியிருந்தனர். அதிலும் குறிப்பாக தசுன் ஷானக்க தலைமையில் இலங்கை அணி ஓவர்களை வீசுவதற்கு பந்துவீச்சாளர்களை தெரிவு செய்த விதம் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. இதன் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை தமது எதிரணி வீரர்களை குறைவான ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தியிருந்தது.

>>பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

இதேநேரம் இலங்கை அணிக்கு நம்பிக்கையாக இருக்க கூடிய துஷ்மன்த சமீரவும் அயர்லாந்து போட்டியில் இணையும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பான முறையில் மாறும் என்பதில் சந்தேகம் கிடையாது.

மறுமுனையில் அவதானிக்க வேண்டிய மற்றுமொரு விடயமாக இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரட்ன காணப்படுகின்றார். இலங்கை டெஸ்ட் தலைவரான திமுத் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பதிவுகளை காட்டாத நிலையில் இலங்கை ஒருநாள் குழாத்தில் இருந்து நீண்டகாலம் நீக்கப்பட்டிருந்தார்.

எனினும் ஆப்கான் ஒருநாள் தொடர் மூலம் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மீண்டும் விளையாடத் தொடங்கியிருக்கும் அவர் 5 போட்டிகளில் 4 அரைச்சதங்களை விளாசியிருக்கின்றார். குறிப்பாக நான்கு அரைச்சதங்கள் திமுத் கருணாரட்ன மூலம் தொடர்ச்சியாக பெறப்பட்டிருக்கின்றது. இன்னும் கருணாரட்ன ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தினை காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கை அணியானது தமது ஒருநாள் குழாத்திற்காக சிறந்த ஆரம்பவீரர் ஒருவரினை எடுத்திருப்பதனை காட்டுகின்றது.

நாளைய போட்டிக்கான இலங்கை குழாத்தினை பார்க்கும் சந்தர்ப்பத்தில் துஷ்மன்த சமீர இணையும் போது ஒரு மாற்றம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அவர் இணையாத சந்தர்ப்பத்தில் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளை எதிர்கொண்ட அதே அணியே மாற்றங்களின்றி களமிறங்கும்.

எதிர்பார்க்கை இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித/துஷ்மன்த சமீர, லஹிரு குமார

அயர்லாந்து

அயர்லாந்து உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் தாம் ஓமான் மற்றும் ஸ்கொட்லாந்து என விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியினைத் தழுவியிருக்கின்றது. எனவே இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுப்பதனை உறுதி செய்யும் இறுதிப் போட்டியாக இலங்கை அணியுடனான மோதல் அமையவிருக்கின்றது.

அதாவது இலங்கை அணியுடன் அயர்லாந்து தோல்வி அடையும் சந்தர்ப்பத்தில் அவர்கள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இருந்து வெளியேறுவதோடு இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினையும் இழப்பார்கள். எனவே கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து அயர்லாந்து நாளை இலங்கையுடன் களமிறங்கவிருக்கின்றது.

அயர்லாந்து குழாத்தினை நோக்கும் போது அணியின் ஆரம்ப வீரர்களாக இருக்கும் எண்டி மெக்பிரைன், போல் ஸ்டேர்லிங் ஆகியோர் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரர்களாக காணப்பட, ஹர்ரி டெக்டர் மற்றும் அணித்தலைவர் அன்டி பல்பைனி ஆகியோரும் அணியில் மேலும் எதிர்பார்க்க கூடிய துடுப்பாட்ட வீரர்களாக காணப்படுகின்றனர்.

இவை ஒரு பக்கமிருக்க பந்துவீச்சு சகலதுறை வீரரான கேர்டிஸ் கேம்பர் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக விளாசிய சதம் மூலம் தன்னால் நீண்ட இன்னிங்ஸ் ஒன்று ஆட முடியும் என்பதனையும் நிரூபித்திருக்கின்றார்.

>>அமெரிக்கா வீரருக்கு பந்துவீச தடை விதித்தது ICC

அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது கேர்டிஸ் கேம்பருடன் மார்க் அடையர், ஜோசுவா லிட்டில் ஆகியோர் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களாக இருக்க இடதுகை சுழல்வீரரான ஜோர்ஜ் டோக்ரல் சுழல்வீரராக தனது தரப்பிற்கு நம்பிக்கை வழங்குகின்றார்.

இதேவேளை அயர்லாந்து அணி மாற்றங்கள் எதனையும் இலங்கை போட்டியில் மேற்கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

அயர்லாந்து எதிர்பார்க்கை பதினொருவர்

என்டி மெக்பிரைன், போல் ஸ்டேர்லிங், அன்டி பல்பைனி (தலைவர்), ஹர்ரி டெக்டர், லோர்கன் டக்கர், கேர்டிஸ் கேம்பர், ஜோர்ஜ் டொக்ரல், கரேத் டெலானி, மார்க் அடையர், ஜோசுவா லிட்டில்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<