ஐக்கிய அமெரிக்கா அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான கைல் பிலிப்பிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது பந்துவீச்சுப் பாணி சட்டவிரோதமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு போட்டித் தடை விதிப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெள்ளிக்கிழமை (23) அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் அவரால் பந்துவீச முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் A குழுவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அமெரிக்கா அணி இதுவரை 3 போட்டிகளில் ஆடி 3 இலும் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அமெரிக்கா அணி 39 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. குறித்த போட்டியில் ஆடிய கைல் பிலிப் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதனிடையே, குறித்த போட்டியின் பிறகு அவரது பந்துவீச்சுப் பாணி முறைகேடான முறையில் இருந்ததாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் அந்த போட்டியின் வீடியோக்களில் அவரது பந்துவீச்சுப் பாணி ICC விதிமுறைகளின் பிரிவு 6.7 இன் படி சட்டவிரோதமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து பந்துவீச்சாளரை விமர்சிக்கும் ஆஸி. முன்னாள் நட்சத்திரங்கள்
- இலங்கைக்கு சவால் கொடுக்குமா ஓமான்?
- ஜிம்பாப்வேயில் இலங்கை அணியுடன் இணையும் இளம் வீரர்கள்
இதன் காரணமாக ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பந்துவீசுவதற்கு அவருக்கு தடைவிதிக்கப்படுவதாக ICC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது பந்துவீச்சுப் பாணியை மாற்றினால் அல்லது ஏற்கனவே பந்துவீசப்படும் பாணி குறித்த தெளிவான விளக்கம் கொடுத்தால் மட்டுமே, பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச அனுமதி வழங்கப்படும் என ICC விளக்கம் அளித்துள்ளது. அதுவரை கைல் பிலிப் பந்துவீசுவதற்கான இடைக்காலத் தடை தொடரும் என ICC அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 வயதான கைல் பிலிப் இதுவரை அமெரிக்கா அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<