இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ரொபின்சனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் மற்றும் அந்நாட்டின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரம் மெதிவ் ஹேய்டன் ஆகியோர் விமர்சித்திருக்கின்றனர்.
>>டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட்<<
இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்த வார ஆரம்பத்தில் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 02 விக்கெட்டுக்களால் த்ரில்லர் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.
விடயங்கள் இவ்வாறு இருக்க இந்தப் போட்டியில் சதம் விளாசி ஆட்டநாயகனாக தெரிவான அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டினை போட்டியின் மூன்றாம் நாளில் கைப்பற்றிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஒல்லி ரொபின்சன் கவாஜாவின் விக்கெட்டின் பின்னர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதோடு, ஆட்டமிழந்த கவாஜாவின் மீது ஆபாசமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில ஊடகங்களுக்கு தனது செயற்பாடு குறித்து விளக்கம் வழங்கியிருந்த ரொபின்சன் தன் மீது தவறு இல்லை எனக் குறிப்பிட்டதோடு தான் இங்கிலாந்து வீரர் என்பதாலேயே விமர்சனங்களுக்கு உள்ளவதாக தெரிவித்து, கடந்த காலங்களில் ரிக்கி பொண்டிங் போன்ற அவுஸ்திரேலிய வீரர்கள் எவ்வாறு களத்தில் நடந்தார்கள் என்பதனை மீட்டிப் பார்க்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொண்டிங் தான் ரொபின்சனின் விமர்சனத்தினை பொருட்படுத்தவில்லை எனக் கூறியதோடு, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுவது எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் விரைவில் இங்கிலாந்து அணி அறிந்து கொள்ளும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் 15 வருடங்களுக்கு முன்னர் நான் நடந்த விதத்தை நினைத்துக் கொண்டதாலே ரொபின்சன் மோசமாக பந்துவீசியிருக்கின்றார் எனக் கூறி, ரொபின்சன் தனது திறமையினை வார்த்தைகளில் இல்லாது செயல்பாட்டில் காண்பிக்க வேண்டும் எனவும் சாடியிருந்தார்.
>>ஆஷஸ் முதல் டெஸ்ட்; இரு அணிகளுக்கும் அபராதம்<<
அதேவேளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றுமொரு முன்னாள் வீரரான மெதிவ் ஹேய்டன், ”ரொபின்சன் ஒரு சுமாரான பந்துவீச்சாளர்” எனக் குறிப்பிட்டு ”மணிக்கு 124 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் அவருக்கு வாய் மாத்திரம் அதிமாக இருக்கின்றது.” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை ரொபின்சனின் விமர்சனம் தொடர்பில் கருத்து வெளியிட்ட உஸ்மான் கவாஜா, ரொபின்சன் பேசியது பார்வையாளர்களின் சத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக தான் ஆட்டமிழந்த போது கேட்கவில்லை எனக் குறிப்பிட்டதோடு, போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் அவருடன் தான் நட்பான வகையிலேயே உரையாடல் மேற்கொண்டதாகவும் கூறியிருந்தார்.
இதுவரை இங்கிலாந்து அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் ஒல்லி ரொபின்சன் 71 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த புதன்கிழமை (28) லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<