இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி சொக்லட் வர்த்தக நாமமான Ritzbury அனுசரணையில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான சேர். ஜோன் டாபர்ட் அஞ்சலோட்ட களியாட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இம்முறை போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 200 பாடசாலைகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
அத்துடன், அண்மையில் நிறைவடைந்த ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்த வலள ஏ ரத்நாயக கல்லூரி மாணவி தருஷி கருணாரத்ன, சேர். ஜோன் டாபர்ட் அஞ்சலோட்ட களியாட்டத்தின் ஆரம்ப நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இதனிடையே, 51ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் கட்டமான வலய மட்டப் போட்டிகளை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் முக்கிய பகுதிகளில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜுலை 07 மற்றும் 08ஆம் திகதிகள் கண்டி போகம்பறை மைதானத்திலும், ஜுலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பெலிஅத்த டி.ஏ ராஜபக்ஷ மைதானத்திலும், ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ். நகர சபை மைதானத்திலும் ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பண்டாரகம பொது மைதானத்திலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
- சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் தொடருக்கு Ritzbury அனுசரணை
- ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனரில் தரூஷ, நேத்ரா சிறந்த வீரர்களாக முடிசூடல்
இம்முறை சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது 12, 13, 14 மற்றும் 15 ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளின் கீழ் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் தேசிய ரீதியிலான இறுதிப் போட்டிகளை நவம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை 91ஆவது சேர் ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட வீரர்கள் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சேர் ஜோன் டாபர்ட் அஞ்லோட்ட களியாட்டம் மற்றும் கனிஷ்ட, சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்கள் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை (20) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் குசல பெர்னாண்டோ, அதன் செயலாளர் நிமல் மதுசிங்க, ரிட்ஸ்பரியின் விற்பனை பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா மற்றும் பொருட்கள் பிரிவு முகாமையாளர் அருண லியனபத்திரன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
>> Photos – Ritzbury Schools Relay Carnival 2023 | Press Conference
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் குசல பெர்னாண்டோ,
”ரிட்ஸ்பரியின் இந்த அனுசரணை இந்தப் போட்டித் தொடரின் வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இதற்கு முன்னரும் ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் தொடருக்கு இந்த நிறுவனம் மிகப் பெரிய ஆதரவை வழங்கியிருந்தது.
இந்த ஆண்டும் இந்தப் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்தமை தொடர்பில் ரிட்ஸ்பரிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும், மெய்வல்லுனர் விளையாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் ரிட்ஸ்பரி போன்ற உள்ளூர் நிறுவனமொன்றில் அனுசரணையை பெற்றுக் கொண்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்தார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<