அமெரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) T20 தொடருக்கான டெக்சாஸ் சுபர் கிங்ஸ் அணியில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் (CSK) மூன்று வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சம்பியனான சென்னை சுபர் கிங்ஸ் அணி நிர்வாகமானது, அமெரிக்காவில் நடைபெறவுள்ள MLC தொடரின் டெக்சாஸ் சுபர் கிங்ஸ் அணியை வாங்கியுள்ளது.
>> மீண்டும் மும்பை அணியில் லசித் மாலிங்க
சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளமிங் டெக்சாஸ் சுபர் கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்படவுள்ள நிலையில், சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டுவைன் பிராவோ டெக்சாஸ் அணியில் வீரராக MLC தொடரில் விளையாடவுள்ளார்.
இந்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், சென்னை சுபர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட நியூசிலாந்தின் டெவோன் கொன்வே மற்றும் சகலதுறை வீரர் மிச்சல் சென்ட்னர் ஆகியோர் டெக்சாஸ் சுபர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் IPL தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த இந்தியா மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகளின் அனுபவ வீரரான அம்பத்தி ராயுடு டெக்சாஸ் சுபர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ளார். இந்திய வீரர்களை பொருத்தவரை சர்வதேச கிரிக்கெட் மற்றும் IPL தொடர்களிலிருந்து ஓய்வுபெறும் வீரர்கள் ஏனைய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட முடியும். அந்த அடிப்படையில் ராயுடு டெக்சாஸ் சுபர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
மேஜர் லீக் கிரிக்கெட் T20 தொடர் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை அமெரிக்காவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<