உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட ஜிம்பாப்வே சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அதற்கு முன்னரான பயிற்சி ஆட்டமொன்றில் ஆடி ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியை 198 ஓட்டங்களால் அபாரமாக வீழ்த்தியுள்ளது.
>>ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் இடம் உறுதி<<
தமது முதல் பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்தை முன்னதாக எதிர்கொண்ட இலங்கை அதே நம்பிக்கையுடன் அமெரிக்க வீரர்களையும் பயிற்சிப் போட்டியில் எதிர்கொண்டது. இலங்கை – ஐக்கிய அமெரிக்க அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டி புலவாயோ நகரில் ஆரம்பமாகியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க வீரர்கள் முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்தனர். இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி முன்வரிசை வீரர்களான குசல் மெண்டிஸ், திமுத் கருணாரட்ன ஆகியோரது சதங்களுடனும் மத்திய வரிசையில் அசத்திய தசுன் ஷானக்க மற்றும் சரித் அசலன்க ஆகியோரது அதிரடி அரைச்சதங்களுடனும் 5 விக்கெட்டுக்களை 392 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் திமுத் கருணாரட்ன 100 பந்துகளை எதிர்கொண்டு 15 பெளண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்கள் எடுக்க குசல் மெண்டிஸ் 91 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 105 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த தசுன் ஷானக்க 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் உடன் 61 ஓட்டங்கள் எடுக்க, சரித் அசலன்க 37 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்தார்.
ஐக்கிய அமெரிக்க அணியின் பந்துவீச்சில் செளராப் நெத்ரவால்கர் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
>>முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி<<
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட சவால்மிக்க 393 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்க அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து போட்டியில் 194 ஓட்டங்களுடன் தோல்வியினைப் பெற்றது.
ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் மோனன்க் படேல் 68 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை பந்துவீச்சில் மதீஷ பத்திரன வெறும் 23 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 02 விக்கெட் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியை உறுதி செய்தனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 392/5 (50) திமுத் கருணாரட்ன 111(100), குசல் மெண்டிஸ் 105(91), செளராப் நெத்ராவால்கர் 60/2(9)
ஐக்கிய அமெரிக்கா – 194 (33.1) மோனன்க் பட்டேலு 68(44), மதீஷ பத்திரன 23/4(6)
முடிவு – இலங்கை 198 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<