தலைவர் பதவியை துறக்கும் ரோஹித் சர்மா?

273
Rohit Sharma after West Indies series

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியா அணியிடம் 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் ICC சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி மீண்டும் தவறவிட்டது.

இந்திய அணியின் தோல்விக்கு அணித் தலைவர் ரோஹித் சர்மா இறுதிப் பதினொருவர் அணியை தேர்வு செய்வதில் தவறு செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக இந்திய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் அணியில் எடுக்காதது பெரும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20i போட்டிளில் இந்தியா விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டாலும், இந்திய அணி விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக, ரோஹித் சர்மா தனது எதிர்கால டெஸ்ட் தலைமைத்துவம் குறித்து பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, குறித்த தொடருக்குப் பிறகு டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து தலைவர் பதவியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, ரோஹித் சர்மாவின் தலைவர் பதவி தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் PTI செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,

“தலைவர் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்றது. ICC இன் 3ஆவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025ஆம் ஆண்டில் முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயதாகிவிடும். இதனால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2 ஆண்டுகள் சுழற்சி முழுவதிலும் ரோஹித் சர்மா தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்பது ஒரு பெரிய கேள்வியாகவே உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் அவரது துடுப்பாட்ட திறமையை தேர்வுக் குழு பார்க்கும் என்று நம்புகிறேன். அதேபோல, குறித்த தொடருக்குப் பிறகு இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன் பிறகு மீண்டும் இந்திய அணி எதிர்வரும் டிசம்பரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. எனவே, ரோஹித்தின் தலைமைத்துவம் தொடர்பில் தேர்வுக்குழுவினர் ஆலோசித்து முடிவு எடுக்க அவகாசம் உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

36 வயதான ரோஹித் சர்மா 7 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தவைராக பணியாற்றியுள்ள நிலையில் அவற்றில் 4இல் வெற்றியும், 2இல் தோல்வியையும் பெற்றுள்ள நிலையில் ஒரு டெஸ்ட் போட்டி சமநிலையிலும் நிறைவுக்கு வந்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<