தேசிய கடற்கரை கபடியில் சாதித்த வடக்கு, கிழக்கு அணிகள்

47th National Sports Festival

278

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடத்திவரும் 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற கடற்கரை கபடியில் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாணம் சார்பில் போட்டியிட்ட நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமும், பெண்கள் பிரிவில் வட மாகாண அணியும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளன.

47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கடற்கரை கபடி மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த 9ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரை வெளியில் நடைபெற்றது.

இதில் கடற்கரை கபடி ஆண்கள் பிரிவு தங்கப் பதக்கத்தை தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஊவா மாகாண ஆண்கள் அணி வென்றதுடன், பெண்கள் பிரிவு தங்கப் பதக்கத்தை ஊவா மாகாண பெண்கள் அணி முதன்முறையாக வென்று வரலாறு படைத்தது.

இதனிடையே, இம்முறை தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடி போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது.

முதலாவது போட்டியில் வட மத்திய மாகாண அணியை 56 – 39 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்ட கிழக்கு மாகாண அணி அரை இறுதிப் போட்டியில் சப்ரகமுவ மாகாண அணியை 45 – 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஊவா மாகாண அணியிடம் 61-25 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

முன்னதாக 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக கடந்த மே மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற கபடி போட்டியிலும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இதன்மூலம் அம்பாறை மாவட்ட கபடி வரலாற்றில் தேசிய விளையாட்டு விழா ஒன்றில் கபடி போட்டிகளில் 2 கபடி நிகழ்ச்சிகளில் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் பதக்கம் வெல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனிடையே, நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் பயிற்சியாளர்களாக மொஹமட் இஸ்மத் மற்றும் இலங்கை தேசிய கபடி அணியின் தலைவர் அஸ்லம் சஜா ஆகிய இருவரும் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபால, பதக்கம் வென்ற மதீனா விளையாட்டுக் கழக அணியில் மொஹமட் ரிஸ்னி, A. ஹமாஸ், A. அப்லல், SL. மொஹமட், A. ஜுமான் மற்றும் மொஹமட் அன்சாப் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடி பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் ஊவா மாகாண அணியிடம் 60 – 45 என்ற புள்ளிகள் அடிப்படையில் வட மாகாண பெண்கள் அணி தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது.

இதன்மூலம் தேசிய மட்ட கடற்கரை கபடி போட்டிகள் வரலாற்றில் வட மாகாண பெண்கள் அணி முதன் முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

பதக்கம் வென்ற வடக்கு மாகாண கடற்கரை கபடி அணியின் பயிற்சியாளராக பி. முகுந்தன் செயல்பட்டிருந்ததுடன். B. தனுஷா, I. தேனுஜா, V. டிலக்ஷனா, A. ப்ளோரன்ஸ், M. தனீஸ்தா மற்றும் R. பிரியவர்ணா ஆகியோர் வட மாகாண அணியில் அங்கம் வகித்தனர்.

இந்த நிலையில், கடற்கரை கபடி ஆண்கள் பிரிவில் தென் மகாணமும், பெண்கள் பிரிவில் மேல் மாகாணமும் வெண்கலப் பதக்கங்களை சுவீகரிக்க, ஆண்கள் பிரிவில் C. சமரகோன் (ஊவா மாகாணம்), பெண்கள் பிரிவில் காஞ்சனா மதுரப்பெரும (ஊவா மாகாணம்) ஆகியோர் முறையே அதிசிறந்த விர வீராங்கனையாக தெரிவாகினர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<