ஜிம்பாப்வேயில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை வியாழக்கிழமை (08) வெளியிட்டுள்ளது.
ICC ஒருநாள் உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிகாண் சுற்றுத் தொடர் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளன.
10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் இம்மாதம் 18ஆம் திகதி முதல் ஜுலை 9ஆம் திகதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கையைத் தவிர ஏனைய 9 அணிக் குழாம்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடும் இலங்கை குழாம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆடிய பெரும்பாலான வீரர்கள் இம்முறை ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். தசுன் ஷானக தலைமையிலான இந்த குழாத்தில் குசல் மெண்டிஸ் உப தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். அதேபோல, அணியின் பிரதான விக்கெட் காப்பாளராகவும் அவர் செயல்படவுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகளில் அரைச் சதமடித்து திறமையை வெளிப்படுத்திய டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரின் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்த திமுத் கருணாரத்ன, இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பெதும் நிஸ்ஸங்கவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கவுள்ளார்.
- அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை
- தென்னாபிரிக்க A அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை A அணி
- ICC மாதாந்த விருதுக்கு இரு இலங்கையர் பரிந்துரை
இதேநேரம், இலங்கை அணியின் அனுபவ வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய இருவருக்கும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் குசல் பெரேரா உபாதையிலிருந்து பூரண குணமடையாத காரணத்தால் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அஞ்செலோ மெதிவ்ஸும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றனர்.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பிய மெதிவ்ஸ், எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறியதால், ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை அணியில் தனது இடத்தை இழந்துள்ளார்.
எவ்வாறாயினும், அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் 44 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம உலகக் கிண்ண குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதனிடையே, இலங்கை துடுப்பாட்ட வரிசையை வழக்கம் போல சரித் அசலன்க, தனன்ஜய டி சில்வா ஆகியோர் பலப்படுத்தவுள்ளனர். இதில் சரித் அசலன்க ஆப்கானிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் 91 ஓட்டங்களைக் குவித்து அசத்தியிருந்தார். அதேபோல ஒரு சகலதுறை வீரராக தனன்ஜய டி சில்வாவும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்று கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று கொடுப்பதில் மகத்தான பங்காற்றிய வேகப் பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர, ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை குழாத்தின் பிரதான வேகப் பந்துவீச்சாளராக இடம்பிடித்துள்ளார்.
துஷ்மன்த சமீர காலில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டு சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார். இதில் 2ஆவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அதேபோல, குறித்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர், தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு துறையினை நோக்கும் போது துஷ்மன்த சமீரவுடன், லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோருடன் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனவும் பலம் சேர்க்கவுள்ளனர்.
இம்முறை IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக பந்துவீச்சில் கலக்கி அனைவரது பாராட்டையும் பெற்ற குட்டி மாலிங்க என்றழைக்கப்படுகின்ற மதீஷ பத்திரன ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும், குறித்த போட்டியில் 66 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் வீழ்த்திய அவருக்கு எஞ்சிய 2 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சை பலப்படுத்தும் நோக்கில் 15 பேர் கொண்ட குழாத்தில் அவர இணைத்துக்கொள்ள தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேபோல, வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக அணித்தலைவர் தசுன் ஷானகவும், சாமிக்க கருணாரத்னவும் செயல்படவுள்ளனர். இவர்கள் தவிர வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அண்மையில் நிறைவடைந்த IPL தொடரில் காயமடைந்த வனிந்து ஹசரங்க ஆப்கானிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. எவ்வாறாயினும், எஞ்சிய 2 போட்டிகளிலும் களமிறங்கிய அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், 2ஆவது ஒருநாள் போட்டியில் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார். வனிந்துவின் இந்த பிரகாசிப்பானது இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வனிந்து ஹஸரங்கவிற்குப் பதிலாக முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமாக சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான துஷான் ஹேமன்தவும் 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்த நுவனிந்து பெர்னாண்டோ, துனித் வெல்லலாகே, ஜெப்ரி வெண்டர்சே, அஷேன் பண்டார, டில்ஷான் மதுஷங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்கு உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி சனிக்கிழமை (10) ஜிம்பாப்வே நோக்கி புறப்பட்டடுச் செல்லவுள்ளது.
எவ்வாறாயினும், ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), குசல் மெண்டிஸ் (உப தலைவர், விக்கெட் காப்பாளர்), பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, தனன்ஜய டி சில்வா, சரித் அசலன்க, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, சாமிக கருணாரத்ன, மதீஷ பத்திரன, லஹிரு குமார, கசுன் ராஜித, துஷ்மன்த சமீர
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<