IPL 2023 இல் துடுப்பினால் அமர்க்களப்படுத்தியவர்கள்

Indian Premier League 2023

346

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16ஆவது அத்தியாயம் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கடைசி பந்து வரையிலான திரில் இறுதிப் போட்டியாக அமைந்து, ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றதில் நிறைவுற்றது.

இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இந்திய அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்த தொடராக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் இளம் வீரர்களைப் போல ஒருசில முன்னணி வீரர்கள் இந்த ஆண்டு IPL தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்ததுடன் சாதனைகளையும் படைத்தனர். குறிப்பாக இன்னும் இந்திய அணியில் இடம் பிடிக்காத யஷாஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா போன்ற வீரர்கள் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்து இந்திய அணிக்கு பெரும் நம்பிகையை ஏற்படுத்தியுள்ளனர்.

இம்முறை IPL தொடரில் 9 வீரர்கள் சசதமடித்து IPL வரலாற்று புத்தகத்தில் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவெனில் IPL சம்பியன் பட்டம் வென்ற சென்னை சுபர் கிங்ஸ் அணியைத் தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.

ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்த சென்னை சுபர் கிங்ஸ்

அதுமாத்திரமின்றி, இந்த ஆண்டு IPL தொடரில் குஜராத் டைட்டஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் 3 சதங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடம் பிடிக்க, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 2 சதங்களைக் குவித்தார்.

எனவே, இந்த ஆண்டு IPL தொடரில் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்து அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 5 வீரர்கள் குறித்த பட்டியலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)

ஒவ்வொரு பருவத்திலும் அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கு செம்மஞ்சள் நிற தொப்பி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு IPL பருவத்தில் இந்த விருதை குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் வென்றுள்ளார். இந்த பருவத்தில் 17 போட்டிகளில் ஆடிய இவர் 890 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 3 சதங்களும், 4 அரைச் சதங்களும் அடங்கும். அவரது சராசரி 59.33 ஆகும். மேலும், 85 பௌண்டரிகளையும், 33 சிக்ஸர்களையும் விளாசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 129 ஓட்டங்கள் அடித்து, இந்த பருவத்தில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதுமாத்திரமின்றி, IPL வரலாற்றில் விராட் கோஹ்லிக்குப் பிறகு ஓர் பருவத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் சுப்மன் கில் 2ஆவது இடம் பிடித்துள்ளார். இதனிடையே, இந்த ஆண்டு IPL தொடரில் தான் களமிறங்கிய கடைசி நான்கு லீக் போட்டிகளில் சுப்மன் கில் மூன்று சதங்கள் விளாசியிருந்தார்.

லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் IPL சதத்தினை எட்டிய சுப்மன் கில் அதன் பின்னர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் அசத்தலான சதம் விளாசினார். இதனால் IPL வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய டேவிட் வோர்னர், ஷிகர் தவான் மற்றும் விராட் கோஹ்லியுடன் சாதனைப் பட்டியலில் கில் இணைந்து கொண்டார்.

அதன் பின்னர் நடைபெற்ற பிளே ஒப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையரில் சதம் விளாசி அட்டகாசப்படுத்தினார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

ஒட்டுமொத்தத்தில் இந்த ஆண்டு IPL தொடரில் துடுப்பாட்டத்தில் கலக்கிய சுப்மன் கில்லுக்கு பெறுமதிக்க வீரர் மற்றும் Game Changer of the Season விருதுகள் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

பாப் டு ப்ளெசிஸ் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்)

இந்த ஆண்டு IPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ் 2ஆவது இடத்தைப் பிடித்தார்.

இந்த பருவத்தில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 730 ஓட்டங்கள் குவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அதிகபட்சமாக 84 ஓட்டங்களை குவித்த அவர், 8 அரைச் சதங்களை அடித்துள்ளார். இதில் 60 பௌண்டரிகள், 36 சிக்ஸர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் சாதிக்க பொறியியல் துறையை விட்ட ஆகாஷ் மத்வால்

இந்த பருவம் முழுவதும் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஆரம்பத்தில் இருந்து முதலிடத்தை டு ப்ளெசிஸ் பெற்றாலும், அந்த அணி பிளே ஒப் வாய்ப்பை இழந்ததால் 2ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். எவ்வாறாயினும், 36 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்கு பாப் டு ப்ளெசிஸ் சொந்தகாரர் ஆனார்.

டெவோன் கொன்வே (சென்னை சுபர் கிங்ஸ்)

இம்முறை IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த டெவோன் கொன்வே, அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தைப் பிடித்தார்.

குஜராத் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டும் டெவோன் கொன்வேயும் அதிரடியாக விளையாடி இருந்தனர். அதிலும் குறிப்பாக, டெவான் கொன்வே 25 பந்துகளில் 47 ஓட்டங்கள் அடித்து ஆட்டம் இழந்திருந்தாலும் முன்வரிசையில் இவர் அமைத்துக் கொடுத்த அதிரடியான ஆரம்பம் அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றது. இதனால் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை டெவான் கொன்வே வென்றார்

இந்த பருவத்தில் 14 போட்டிகளில் ஆடி 585 ஓட்டங்களைக் குவித்தார். இதில், 6 அரைச் சதங்கள் அடங்கும். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் அரைச் சதமடித்து அசத்திய அவர், 92 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

விராட் கோஹ்லி (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்)

முன்னர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக இருந்தவர் விராட் கோஹ்லி. கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வருகின்ற கோஹ்லிக்கு இந்த ஆண்டு IPL தொடரிலும் தனது அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முடியாமல் போனது. ஆனாலும், இதுவரை நடைபெற்றுள்ள 16 பருவங்களிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு IPL தொடரில் 14 போட்டிகளில் ஆடி கோஹ்லி 639 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 4ஆவது இடத்தைப் பிடித்தார். அவரது துடுப்பாட்ட சராசரி 53.25 ஆகும். இதில் 65 பௌண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களை அவர் பதிவு செய்துள்ளார். மேலும் 2 சதங்கள் மற்றும் 6 அரைச் சதங்கள் இதில் அடங்கும். சர்வதேச கிரிக்கெட் உட்பட விராட் கோலி விளையாடும் ஒவ்வொரும் போட்டியிலும் அவர் சாதனை படைப்பது வழக்கம்.

அதன்படி, இம்முறை IPL தொடரில் ஒருசில சாதனைகளையும் அவர் முறியடித்திருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 62 பந்துகளில் சதம் அடித்த விராட் கோஹ்லி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான பேட்டியில் 61 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்து 2ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இது IPL போட்டிகளில் விராட் கோஹ்லி அடித்த 7ஆவது சதமாகும்.

இதன்மூலம் IPL போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்தள்ளி விராட் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்தார். அதுமாத்திரமின்றி, T20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த விராட் கோஹ்லி, IPL கிரிக்கெட்டிலும் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

IPL கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 7,263 ஓட்டங்களை விராட் கோஹ்லி குவித்துள்ளார். அதன்மூலம் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் அவர் உள்ளார். மொத்தம் 643 பௌண்டரிகள் விளாசி அதிக பௌண்டரிகள் அடித்த துடுப்பாட்ட வீரர்ககளில் 3ஆவது இடத்தில் உள்ளார். 234 சிக்ஸர்கள் விளாசி அதிக சிக்ஸர்கள் பதிவு செய்த வீரர்களில் 5ஆவது இடத்தில் உள்ளார். 50 அரைச் சதங்கள் மற்றும் 7 சதங்களை கோலி இதுவரை IPL கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ஒரு பருவத்தில் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், டேவிட் வோர்னர் ஆகியோரின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்துள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஷ்வால் (ராஜஸ்தான் றோயல்ஸ்)

இந்த ஆண்டு IPL தொடரில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்ற யஷஸ்வி ஜெய்ஷ்வால் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இம்முறை IPL தொடரில் 14 லீக் போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஒரு சதம், 5 சதங்கள் உட்பட 625 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 82 பௌண்டரிகளும், 26 சிக்ஸர்களும் அடங்கும். 30க்கும் அதிகமான ஓட்டங்களை 3 முறை விளாசியிருக்கிறார். இவரது ஓட்ட வேகம் 163 ஆக இருக்கிறது. அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 124 ஆகும்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சதமடித்து, தனது முதல் IPL சதத்தைப் பதிவு செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மே 11ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 13 பந்துகளில் அரைச் சதம் அடித்து பரவசப்படுத்தியிருந்தார்.

இந்த பருவத்தில் ஜோஸ் பட்லருடன் இணைந்து ஆரம்ப வீரராகக் களமிறங்கி கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டம் காரணமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்தார். ருதுராஜ் கெய்க்வாடுக்கு ஜூன் 3ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதால் அவருக்குப் பதிலாக யஷஸ்விக்கு வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 2020 IPL தொடரில் அவர் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி சார்பில் 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு இந்திய 19 வயதின்கீழ் அணிக்கு தேர்வாகி, அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். 2020 முதல் IPL தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிய போதிலும் அவரால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு IPL தொடரில் சிறப்பாக ஆடி வளர்ந்து வரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

இதனிடையே, இம்முறை IPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 5 முதல் 10 வரையான இடங்களில் முறையே மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் (605 ஓட்டங்கள்), சென்னை சுபர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (590 ஓட்டங்கள்), டெல்லி கெபிடல்ஸ் வீரர் டேவிட் வோர்னர் (516 ஓட்டங்கள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரின்கு சிங் (474 ஓட்டங்கள்), மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் (454 ஓட்டங்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<