சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான போட்டி அதிகாரிகளின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்த போட்டி அதிகாரிகள் குழாத்தில் ஒரு போட்டி மத்தியஸ்தர் மற்றும் 5 நடுவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து வெளியேறும் ரஷித் கான்
முழுமையான தொடருக்குமான போட்டி மத்தியஸ்தராக ஐசிசியின் உயரடுக்கு போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
நடுவர்களை பொருத்தவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடுவர் குழாத்தில் இடம்பெற்றுள்ள இலங்கையின் முன்னணி நடுவர் குமார் தர்மசேன இணைக்கப்படவில்லை.
எனினும் இரண்டு வெளிநாட்டு நடுவர்களாக இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நடுவர் நிதின் மேனன் மற்றும் இங்கிலாந்தின் மைக்கல் கோக் ஆகியோர் இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடரில் நடுவர்களாக செயற்படவுள்ளனர்.
இவர்கள் இருவரையும் தவிர்த்து இலங்கையைச் சேர்ந்த நடுவர்களாக ருச்சிர பல்லியகுருகே, லிண்டன் ஹெனிபல் மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் நடுவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 2ம் திகதி முதல் 7ம் திகதிவரை ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி மத்தியஸ்தர் – ரஞ்சன் மடுகல்ல
நடுவர்கள் – நிதின் மேனன், மைக்கல் கோக், ருச்சிர பல்லியகுருகே, லிண்டன் ஹெனிபல், பிரகீத் ரம்புக்வெல்ல
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<