கிரிகிஸ்தானை வீழ்த்தி 5வது இடத்தை பிடித்த இலங்கை மகளிர்

CAVA Women's Volleyball Challenge Cup 2023

180

நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-0 என கிரிகிஸ்தானை இலகுவாக வெற்றிகொண்டது.

ஐந்தாவது இடத்துக்கான இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி, கிரிகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் மிகச்சிறப்பாக ஆடிய இலங்கை மகளிர் அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்திருந்தது. ஆட்டத்தின் முதல் செட்டில் 25-11 என்ற மோசமான தோல்வியை கிரிகிஸ்தான் அணிக்கு இலங்கை வழங்கியது.

பின்னர் ஆரம்பமான இரண்டாவது செட்டை பொருத்தவரை கிரிகிஸ்தான் அணி சற்று சவாலை கொடுத்திருந்தது. எனினும் இலங்கை அணி 25-20 என இரண்டாவது செட்டை கைப்பற்றியது. தொடர்ந்து ஆரம்பமான மூன்றாவது செட்டை 25-14 என இலங்கை வெற்றிக்கொள்ள 3-0 என போட்டியை கைப்பற்றியது.

இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடரை 5வது இடத்துடன் நிறைவுசெய்துள்ளது.

பங்களாதேஷ் எதிர் மாலைத்தீவுகள் (7-8வது இடத்துக்கான போட்டி)

பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான 7 மற்றும் 8வது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் மாலைத்தீவுகள் அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

முதல் செட்டை 25-21 என பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் 25-14, 25-23 மற்றும் 25-15 என மாலைத்தீவுகள் அணி கைப்பற்றி வெற்றிபெற்றது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<