இலங்கை கிரிக்கெட்டின் ஆடைப்பங்காளராக Moose

235

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) புதிய ஆடைப்பங்களாராக (Clothing Partner) மூஸ் (Moose) நிறுவனம் கரம் கோத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2027ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடைப்பங்காளர்களாக மூஸ் நிறுவனம் செயற்படவிருக்கின்றது.

>> வளர்ந்துவரும் மகளிர் ஆசியக் கிண்ண போட்டி அட்டவணை வெளியானது

எனவே, குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ள அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு (ஆடவர், மகளிர்) மூஸ் நிறுவனமே அணிகளின் சீருடைகளை (ஜேர்சிகளை – Jersey) வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மூஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வழங்குகின்ற புதிய ஜேர்சிகள் இலங்கை – ஆப்கான் ஆடவர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் முதல் தடவையாக பயன்படுத்தப்படவிருக்கின்றன. இதேநேரம் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய ஜேர்சிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு வியாழக்கிழமை (25) கொழும்பில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>Photos – Launch of Moose as Sri Lanka Cricket’s Official Clothing Partner 2023-27<<

இந்த நிகழ்வில் தேசிய கிரிக்கெட் அணி வீரர்களான திமுத் கருணாரட்ன, தனன்ஞய டி சில்வா மற்றும் தேசிய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து போன்ற முக்கியமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மிக முக்கிய ஆடை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சி அடைந்து வரும் மூஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஹாஸிப் ஒமர் இலங்கை கிரிக்கெட்டுடன் தமது நிறுவனம் கரம் கோர்த்திருப்பதன் மூலம், இலங்கையின் பலம் பொருந்திய வருமானமீட்டும் துறையான ஆடை உற்பத்தி துறையும் கிரிக்கெட்டும் ஒன்றிணைந்திருப்பதாக கூறியிருந்ததோடு, இந்த இணைப்பிற்காக தான் சந்தோசமடைவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  மூஸ் நிறுவனம் கடந்த காலங்களிலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனுசரணை வழங்கியிருந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

>> இந்திய – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல

இதேநேரம், இலங்கையின் கிரிக்கெட் அணிகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய ஜேர்சிகள் வீர, வீராங்கனைகளின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதோடு, இலங்கையின் கலாச்சார விடயங்களை பிரதிபலிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

>> புதிய ஜேர்சி அறிமுக நிகழ்வின் புகைப்படத் தொகுப்பிற்கு <<

அதேவேளை இரு நிறுவனங்கள் இடையிலான புதிய இணைப்பு மூலம், இலங்கையின் கிரிக்கெட்டும், ஆடைத் தொழில் உற்பத்தி துறையும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<