தெற்காசியாவின் அதிவேக வீரரும், இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரருமான யுபுன் அபேகோன், இத்தாலியில் நேற்று (24) நடைபெற்ற Citta Di Savona International 2023 போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
2023 பருவகாலத்தில் தனது முதலாவது 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், போட்டி தூரத்தை 10.01 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆவது இடத்தைப் பிடித்தார்.
எனினும், காற்றின் வேகத்திசைகாட்டியின் வாசிப்பு அனுமதிக்கப்பட்ட அளவினை விட +2.7 அதிகமாக இருந்த காரணத்தினால் யுபுன் அபேகோனின் நேரம் எந்தவொரு சாதனையாகவும் கருதப்பட்டிருக்கவில்லை.
அதேபோல, 100 மீட்டர் இறுதிப்போட்டியை நிறைவு செய்கின்ற போது அவரது காலி உபாதை ஏற்பட்டதை கவனிக்க முடிந்தது. ஆனால் அவரது உபாதை தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியை 10.04 செக்கன்களில் ஓடி முடித்த யுபுன் இரண்டாவது இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்த யுபுன் அபேகோன்
- உலக மற்றும் ஒலிம்பிக் சம்பியன்களுடன் போட்டியிடவுள்ள யுபுன்
இதனிடையே, இந்த மாத முற்பகுதியில் இத்தாலியில் நடைபெற்ற Firenze Sprint Festival 2023 மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தார்.
இதன்படி, 2023இல் தான் பங்குபற்றிய 200 மற்றும் 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் யுபுன் வெற்றிகளைப் பதிவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சவோனா மெய்வல்லுனர் தொடரில் 100 மீட்டர் இறுதிப்போட்டியை 9.94 செக்கன்களில் ஓடி முடித்த பிரித்தானியாவின் ப்ரெஸ்கோ ரீஸி முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, ஐவரி கோஸ்ட் வீரர் சிஸ்ஸே ஆர்தர் (10.03 செக்.) மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<