முதல் அணியாக பிளே-ஓப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்

Indian Premier League 2023

2215
Gujarat Titans v Sunrisers Hyderabad

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக திங்கட்கிழமை (15) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இதன்மூலம் IPL நடப்புச் சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்து முதல் அணியாக பிளே-ஓப் சுற்றில் அடியெடுத்து வைக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஓப் சுற்றிலிருந்து வெளியேறியது.

IPL தொடரில் திங்கட்கிழமை நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இந்தப்போட்டியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதமாக குஜராத் டைட்டன்ஸ் அணி நீல இளஞ்சிவப்பு நிற ஜேர்சியில் களமிறங்கியது. அதேபோல, இலங்கை T20i அணியின் தலைவர் தசுன் ஷானக தனது அறிமுக IPL போட்டியில் களமிறங்கினார்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான விருத்திமன் சாஹா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கைகோர்த்த சுப்மன் கில் – சாய் சுதர்ஷன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

எதிரணி பந்துவீச்சாளர்களை திக்முக்காட வைத்த சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்து அசத்தியதுடன், IPL போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். மறுபுறத்தில் அதிரடி காண்பித்த சாய் சுதர்ஷன் 36 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசினார். அதன்பின்னர் களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேற, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைக் குவித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஹைதராபாத் அணிக்காக இரண்டு முறை (ஒரே போட்டியில்) 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை புவனேஷ்வர் குமார் பெற்றுள்ளார். அதேபோல, ஒட்டுமொத்தமாக அதிக தடவைகள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் வரிசையிலும் புவனேஷ்வர் குமார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையடுத்து 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஆரம்ப வீரர்களான அன்மோல் ப்ரீத் சிங் (5), அபிஷேக் சர்மா (4), எய்டன் மார்க்ரம் (10), ராகுல் திரிபாதி (1) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்பிறகு 5ஆவது வீரராக களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

எட்டாவது விக்கெட்டுக்காக ஹென்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த புவனேஷ்வர் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் கிளாசன் 44 பந்துகளில் 4 பௌண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 64 ஓட்டங்களையும், புவனேஷ்வர் குமார் 27 ஓட்டங்களையும் எடுக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

குஜராத் அணி தரப்பில் மொஹமட் ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை T20i அணியின் தவைவர் தசுன் ஷானக புதிய மைல்கல்லொன்றை எட்டினார். இந்தியன் பிரீமியர் லீக், லங்கா பிரீமியர், பங்களாதேஷ் பிரீமியர் லீக் மற்றும் பாகிஸ்தான் சுபர் லீக் ஆகிய நான்கு தொடர்களில் தசுன் ஷானக முதல் தடவையாக களமிறங்கிய 4 அணிகளும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு IPL தொடரில் 13 போட்டிகளில் 9 இல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் பிளே-ஓப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

>>  பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<