பிரப்சிம்ரனின் சதம், பிராரின் அபார பந்துவீச்சுடன் பஞ்சாப் அணிக்கு வெற்றி

IPL 2023

248

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற IPL தொடரின் 59வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததுடன், பந்துவீச்சில் சிறந்த பிரகாசிப்பினை வெளிப்படுத்தியது.

ஜப்பானை வீழ்த்தி தொடரை 3-0 என வென்ற இலங்கை இளம் அணி!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எந்தவித ஆரம்பங்களும் இல்லாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து பெவிலியன் திரும்பினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரப்சிம்ரன் சிங் மாத்திரம் களத்திலிருக்க பஞ்சாப் அணி 45 ஓட்டங்களுக்கு தங்களுடைய 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதனைத்தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங்குடன் ஜோடி சேர்ந்த செம் கரன் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்ப தொடங்கினார். செம் கரன் 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க பிரப்சிம்ரன் சிங் அற்புதமாக ஆடினார்.

இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்காக 72 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க உதவினர். செம் கரனின் ஆட்டமிழப்பை தொடர்ந்து வருகைத்தந்த துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பிரப்சிம்ரன் சிங் மாத்திரம் தனியாளாக ஓட்டங்களை குவித்து தன்னுடைய கன்னி சதத்தை IPL தொடரில் பதிவுசெய்தார்.

அணியின் 19வது ஓவர்வரை துடுப்பெடுத்தாடிய இவர் 65 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. டெல்லி அணிக்காக அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வோர்னர் மற்றும் பில் சோல்ட் ஆகியோர் வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் 6.2 ஓவர்களில் 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், பில் சோல்ட் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் தொடர்ச்சியான ஓவர்களில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்க, டேவிட் வோர்னர் 27 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். டெல்லி அணி ஒரு கட்டத்தில் 69 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நிலையிலிருந்து 88 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது.

சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை வீணாக்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹர்ப்ரீட் பிரார் அபாரமாக பந்துவீசினார். இவர் தன்னுடைய 4 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 12 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்று பிளே-ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி நீடித்துள்ளது. பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 8 புள்ளிகளை மாத்திரம் பெற்று, IPL தொடரின் பிளே-ஓஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<