ஆசியக் கிண்ணமும் சூடு பிடித்துள்ள மோதல்களும்

849

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு (2023) இந்தியாவில் சிக்கல்களின்றி நடைபெறும் எனக் கூறப்பட்ட போதும், ஒருநாள் போட்டிகளாக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா அல்லது வேறு ஒரு நாட்டில் நடைபெறுமா என்பதில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவுகின்றது.

இம்தியாஸ் ஸ்லாஷாவின் பிரகாசிப்புடன் இலங்கைக்கு 2வது வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கான உரிமத்தினை தம்மகத்தே கொண்டிருக்கின்றது. எனவே பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம்  நடைபெற்றால் அதில் விளையாடுவதற்கு இந்தியா, இரு நாடுகளுக்கும் இருக்கும் அரசியல் குளறுபடிகளால் பாகிஸ்தான் பயணமாகாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கு இந்தியாவினை அடிப்படையாக கொண்ட நிறுவனங்களே அதிக அனுசரணை வழங்குவதன் காரணமாக இந்தியா விளையாடாத ஆசியக் கிண்ணத் தொடர் ஒன்று சாத்தியம் கிடையாது என்ற அடிப்படையில், தொடரினை வேறு ஒரு நாட்டில் நடாத்த தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்பட்டது.

அந்தவகையில் ஆசியக் கிண்ணத் தொடரினை பாகிஸ்தானும், ஐக்கிய அரபு இராச்சியமும் இணைந்து நடாத்துவதற்கான ஒரு திட்டத்தினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன் வைத்திருந்து. அதாவது ஆசியக் கிண்ணத்தில் இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஏனைய நாடுகளின் போட்டிகள் பாகிஸ்தானிலும் நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

எனினும் ஆசியக் கிண்ணம் நடாத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் செப்டம்பர் மாத காலப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருக்கும் அதிக உஷ்ணம் காரணமாக அங்கே போட்டிகளில் விளையாட இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. அதாவது ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரண்டு நாடுகளிலும் நடாத்தப்படுகின்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் திட்டத்திற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதனை இது வெளிப்படுத்துகின்றது.

மதீஷவின் அபார பந்துவீச்சோடு சென்னை சுபர் கிங்ஸ் வெற்றி

இதேநேரம், இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தினை முழுமையாக இலங்கை அல்லது பங்களாதேஷில் நடாத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் ஆசியக் கிண்ணத்தினை நடாத்தினால் சிறப்பாக இருக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழல்வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனல் வாயிலாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தான் அல்லாத ஒரு இடத்தில் நடைபெறும் போது, அந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளிநடப்புச் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் பாகிஸ்தானில் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டதனை அடுத்து பாகிஸ்தானில் தற்போது தொடர்ச்சியான வன்முறைகள் நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில், அது விடயங்களை மேலும் சிக்கலாக மாற்றியிருக்கின்றது.

அதாவது, பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் நிலைமைகள் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு இராச்சியம் என இரண்டு நாடுகளும் இணைந்து ஆசியக் கிண்ணத்தை நடாத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொண்டு வந்த திட்டத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் அமைந்திருக்கும் இஸ்லாமாபாத், லாஹூர் மற்றும் பெஷாவர் ஆகிய இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட 1000 இற்கும் மேற்பட்டோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக அல்-ஜெசீரா செய்தி நிறுவனம் குறிப்பிடுவதோடு, அங்கே தொலைத்தொடர்பு சமூக வலைதளங்களின் சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலைமைகள் காலக் கிரமத்தில் சீராகாது போயின் விடயங்கள் மேலும் சிக்கலாக மாற முடியும்.

எனவே, பாகிஸ்தானில் அரசியல் சிக்கல்கள் சீராகாது இருக்கும் சந்தர்ப்பத்தில் ஆசியக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் ஏனைய நாடுகளும் பாதுகாப்பு பிரச்சினைகளை கருதி தங்களது நாட்டு அணிகளை பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுப்பாமல் இருக்க முடியும். எனவே, இது ஆசியக் கிண்ணம் இந்த ஆண்டில் நடைபெறுவதனையே சிக்கலுக்கு உள்ளாக்கலாம். ஆசியக் கிண்ணத்திற்கு வேறு ஒரு வடிவில் பாரிய ஆபத்து ஒன்று ஏற்பட்டிருப்பதனை இந்த விடயங்கள் தெளிவுபடுத்துகின்றன.

தசுன் ஷானக அமெரிக்காவில் கிரிக்கெட் ஆட ஒப்பந்தம்

இன்னுமொரு விடயத்தினையும் பார்க்கலாம். பாகிஸ்தான் 2009ஆம் ஆண்டு அந்த நாட்டில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த துர்ச்சம்பவத்தினை அடுத்து, தமது நாட்டிற்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டினை கொண்டு வருவதில் பல சிக்கல்களை சந்தித்து தற்போது அதில் வெற்றியடைந்திருக்கின்றது.

பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டு பாதிப்பிற்கு உள்ளான இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் அங்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளை விளையாடியிருக்கின்றன. இந்த மாத ஆரம்பத்தில் பாகிஸ்தான் சென்றிருந்த நியூசிலாந்து அணியும் அங்கே வெற்றிகரமாக தமது சுற்றுப் பயணத்தினை நிறைவு செய்து நாடு திரும்பியிருந்தது.

இவ்வாறாக விடயங்கள் அனைத்தும் இருக்கும் நிலையில் கிரிக்கெட் இரசிகர்களும், விளையாட்டுப் பிரியர்களும் பொதுவாக விளையாட்டில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என எப்போதும் எதிர்பார்க்கின்றனர். எனவே ஆசியக் கிண்ணம் தொடர்பில் சரியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அது அனைவரும் இரசிக்கும் படியான ஒரு கிரிக்கெட் தொடராக இருக்க இந்த ஆண்டும் நடைபெற வேண்டும் என்பதே அனைவரது அவாவாகவும் காணப்படுகின்றது.

அதேவேளை தொடரினை நடாத்தும் உரிமத்தினை கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் தொடரில் பங்கெடுக்கும் கிரிக்கெட் அணிகள் என அனைத்து நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் வேண்டுகோள்களுக்கு நியாயம் கொடுக்கும் வகையிலும் ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<