இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 56ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர்களை 09 விக்கெட்டுக்களால் அதிரடியாக வீழ்த்தியிருக்கின்றது.
>> ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மே.தீவுகள்
ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி வியாழக்கிழமை (12) கொல்கத்தா அரங்கில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கொல்கத்தா அணிக்கு வழங்கினார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்தனர்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் வெங்கடேஷ் அய்யர் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் எடுக்க, ராஜஸ்தான் றோயல்ஸ் பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 149 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 151 ஓட்டங்களுடன் அடைந்தது.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் உடன் 98 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
>> பந்துவீச்சு பலத்துடன் தொடரை சமப்படுத்திய இலங்கை மகளிர் அணி
இதில் ஜெய்ஸ்வால் இப்போட்டியின் மூலம் 13 பந்துகளில் அரைச்சதம் விளாசி IPL போட்டிகள் வரலாற்றில் பெறப்பட்ட அதிவேகமான அரைச்சதத்தினைப் பதிவு செய்தார். அத்துடன் போட்டியின் ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டிருந்தது.
போட்டியின் சுருக்கம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 149/8 (20) வெங்கடேஷ் அய்யர் 57(42), யுஸ்வேந்திர சாஹல் 25/4(4), ட்ரென்ட் போல்ட் 15/2(3)
ராஜஸ்தான் றோயல்ஸ் – 151/1 (13.1) யஷஸ்வி ஜெய்ஸ்வால் 98(47)*, சஞ்சு சாம்ஷன் 48(29)*
முடிவு – ராஜஸ்தான் றோயல்ஸ் 09 விக்கெட்டுக்களால் வெற்றி
இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<