தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை (08) இரண்டு புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
இதில் யாழ். பருத்தித்துறை, ஹார்ட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 38.91 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து மிதுன்ராஜ் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
முன்னதாக போட்டித் தொடரின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை (08) நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான தட்டெறிதலில் 43.61 மீட்டர் தூரத்திற்கு தட்டை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற அவர், அன்றைய தினம் மாலை நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 13.06 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து தனது 2ஆவது தங்கப் பதக்கம் சுவீகரித்தார்.
இதன்மூலம் 2 நாட்களில் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று மிதுன்ராஜ் அரிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் அவர் இவ்வாறு ஹெட்ரிக் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
சுமன் கீரனுக்கு முதல் தங்கம்
செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியை 35 நிமிடங்கள், 44.37 செக்கன்களில் நிறைவு செய்து கிளிநொச்சி முழங்காவில் தேசிய பாடசாலை வீரர் சுமன் கீரன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் போட்டியில் அவர் வென்றெடுத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் சுமன் கீரன் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 20 வயதின்கீழ் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் எம். டினுஷன் (35:42. 31 செக்.) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
>> கோலூன்றிப் பாய்தலில் பதக்கங்களை வென்ற யாழ். வீரர்கள்
அபிநயாவுக்கு 2ஆவது தங்கம்
கண்டி திகன, இந்து தேசிய கல்லூரி வீராங்கனை என். அபிநயா, 18 வயதின்கீழ் பெண்களுக்கான 2 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை நிறைவு செய்ய 7 நிமிடங்கள், 44.37 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
அவர் திங்கட்கிழமை காலை நடைபெற்ற 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் தனது 2ஆவது தங்கப் பதக்கத்தை அவர் வென்றார்.
செவ்வானத்துக்கு 2ஆவது பதக்கம்
18 வயதின்கீழ் பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் வல்வெட்டித்துறை – பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வகுமார் செவ்வானம், 30.76 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 18 வயதின்கீழ் பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஸ்வினுக்கு இரண்டாமிடம்
20 வயதின்கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியிலில் பங்குபற்றிய பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை வீரர் ரஸ்வின் கரீம் 6.89 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
>>ஒரே நாளில் 2 பதங்கங்களை வென்ற மிதுன்ராஜ், ரிபாய்
2 போட்டிச் சாதனைகள் முறியடிப்பு
18 வயதின்கீழ் பெண்களுக்கான சம்மட்டி எறிதலில் நுகேகொடை அநுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த யுதாரா லிந்துலி ஜயவீர புதிய போட்டிச் சாதனையுடன் (36.79 மீட்டர்) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்
அதேபோல, 23 வயதின் கீழ் பெண்களுக்கான சம்மட்டி எறிதலில் மாத்தறை, யட்டியான மகா வித்தியாலய வீராங்கனை நிதின்சா மந்தனி 40.00 மீட்டர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
புதன்கிழமை (10) போட்டியின் நான்காவதும், கடைசி நாளாகும்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<