மதீஷ பத்திரன ஏன் ரொனால்டோ போன்று கொண்டாடுகின்றார்?

296

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிரமான ரசிகன் என்பதால் அவரது கோல் கொண்டாட்டத்தை போல எனது விக்கெட் கொண்டாட்டத்தை அமைத்துக் கொண்டேன் என சென்னை சுபர் கிங்ஸ் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரன தெரிவித்துள்ளார்.

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற IPL தொடரின் 49ஆவது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டது.

இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மதீஷ பத்திரன 4 ஓவர்கள் வீசி 15 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இந்த நிலையில், விக்கெட் எடுத்த பிறகு மதீஷ பத்திரன வித்தியாசமான முறையில் விக்கெட் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார். குறிப்பாக விக்கெட் எடுத்த பின் கண்களை மூடி வானத்தை நோக்கி பார்த்தவாறு சில விநாடிகள் அமைதியாக இருப்பது போன்று கொண்டாடுகிறார்.

இந்த வித்தியாசமான கொண்டாட்டம் மற்றும் அவரது பந்துவீச்சு குறித்தும் மும்பை அணிக்கெதிரான போட்டியின் பிறகு இடம்பெற்ற நேர்காணலில் எழுப்பிய கேள்விக்கு மதீஷ பத்திரன பதிலளிக்கையில்,

”சென்னை சுபர் கிங்ஸ் அணியுடனான எனது பயணம் கடந்த ஆண்டு ஆரம்பமாகியது. மாற்று வீரராக அணியில் இடம்பிடித்து 2 போட்டிகள் மட்டுமே விளையாடினேன். ஆனால், இந்த ஆண்டு நான் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. சென்னை அணி நிர்வாகம் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்துள்ளது. T20 கிரிக்கெட்டில் இதுதான் எனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகும். எனது ஆட்டத்தில் எனக்கு மகிழ்ச்சி. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன். அதனால்தான் (விக்கெட் எடுத்த பின்) அவரை போல் கொண்டாடுவேன்’ என்றார்.

இம்முறை IPL தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷ பத்திரன, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<