அரைசதத்துடன் ஒருநாள் போட்டி மீள்வருகையை ஆரம்பித்த திமுத்

2176

பங்களாதேஷில் தற்போது நடைபெற்று வருகின்ற டாக்கா பிரீமியர் டிவிசன் ஒருநாள் தொடரில் சினேபுகூர் கிரிக்கெட் கழக அணிக்காக ஆடி வருகின்ற இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, டாக்கா லெபர்ட்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் அரைச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி சவரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டாக்கா லெபர்ட்ஸ் அணி, 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைக் குவித்தது.

டாக்கா அணியின் துடுப்பாட்டத்தில் சபீர் ஹொசேன் அரைச் சதம் கடந்து 69 ஓட்டங்களையும், ஜெசிம் உத்தீன் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். சினேபுகூர் கிரிக்கெட் கழகம் தரப்பில் பர்ஹத் ரீஸா 3 விக்கெட்டுகளையும், மசூம் கான் மற்றும் நயீம் அஹ்மட் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

198 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சினேபுகூர் கிரிக்கெட் கழக அணி, 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை எடுத்து வெற்றயீட்டியது.

சினேபுகூர் கிரிக்கெட் கழக அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த திமுத் கருணாரத்ன, 8 பௌண்டரிகளுடன் 66 பந்துகளில் 70 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுக்;க, வேகமாக ஓட்டங்களைக் குவித்த ஜிஸான் அலெம் 31 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்தார்.

இறுதியில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் சினேபுகூர் கிரிக்கெட் கழக அணி வெற்றியீட்டியது.

ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பும் திமுத் கருணாரத்!

இந்த நிலையில், சினேபுகூர் கிரிக்கெட் கழக அணி, கடந்த 7ஆம் திகதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் அக்ரானி வங்கி கழக அணியை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த சினேபுகூர் கிரிக்கெட் கழக அணி 140 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. அத்துடன், சினேபுகூர் கிரிக்கெட் கழக அணிக்காக களமிறங்கிய திமுத் கருணாரத்னவுக்கு 21 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இதேவேளை, 9 அணிகள் மோதும் இம்முறை டாக்கா பிரீமியர் டிவிசன் ஒருநாள் தொடரில் 13 லீக் போட்டிகளில் ஆடிய சினேபுகூர் கிரிக்கெட் கழக அணி 4இல் மாத்திரம் வெற்றயீட்டி புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்து சுபர் லீக் சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<