வாய்ப்புக்களை வீணடித்து போட்டியை சமன் செய்த இராணுவப்படை

266

இலங்கை இராணுவப்படை மற்றும் இலங்கை விமானப்படை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடர் 2023 இன் ஆடவருக்கான இரண்டாவது லீக் ஆட்டம் தலா ஒரு கோலுடன் சமநிலையில் நிறைவுபெற்றது.

முன்னர் இடம்பெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை கடற்படை அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் விமானப்படை அணியை வீழ்த்தியிருந்தது. எனவே, தமது இரண்டாவது போட்டியில் முதல் வெற்றிக்காக விமானப்படை அணியினர் இராணுவப்படையை கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் எதிர்கொண்டனர்.

ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் இலங்கை விமானப்படையின் பின்களத்தில் இருந்து அவ்வணியின் ஹர்ஷ பெர்னாண்டோ எதிரணியின் கோல் எல்லைக்கு செலுத்திய பந்தை சஞ்சு பெர்னாண்டோ பெற்று அணியின் சக வீரர் லக்மால் குனசிங்கவுக்கு வழங்க, அதனை லக்மால் கோலாக்கி போட்டியில் விமானப்படையை முன்னிலைப்படுத்தினார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் இராணுவப்படை வீரர் மதுஷான் டி சில்வா, ஹர்ஷ பெர்னாண்டோ மூலம் கோல் எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, இராணுவப்படைக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன்போது றிப்கான் மொஹமட் உதைந்த பந்தை விமானப்படை கோல்காப்பாளர் ருவன் அருனசிறி தடுத்தார்.

தொடர்ந்து போட்டியின் 45ஆவது நிமிடத்தில் லக்மால் வீரசிங்க வழங்கிய பந்தினைப் பெற்ற றிப்கான் மொஹமட் அதனை தடுப்பு வீரர்கள் மற்றும் கோல்காப்பாளரையும் தாண்டி பந்தை உயர்த்தி கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் சம பலத்துடன் ஆடினாலும் இராணுப்படையின் அனுபவ வீரர்கள் தமக்கு கிடைத்த பல கோல் வாய்ப்புக்களை சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர். இதனால் போட்டி தலா ஒரு கோலுடன் சமநிலை பெற்றது.

எனவே, இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடரின் ஆடவருக்கான இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடற்படை அணி ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளையும், இராணுவப்படை அணி ஒரு சமநிலையான முடிவுடன் ஒரு புள்ளியையும், விமானப்படை தமது இரண்டு போட்டிகளின் நிறைவில் ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் ஒரு புள்ளியையும் பெற்றுள்ளது.

தொடரின் இறுதி லீக் போட்டி கடற்படை மற்றும் இராணுவப்படை அணிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெறவுள்ளது.

முழு நேரம்: இலங்கை இராணுவப்படை வி.க 1 – 1 இலங்கை விமானப்படை வி.க

கோல் பெற்றவர்கள்

  • இலங்கை இராணுவப்படை வி.க –  றிப்கான் மொஹமட் 45’
  • இலங்கை விமானப்படை வி.க – லக்மால் குனசிங்க 27’

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<