மதீஷ பத்திரனவின் எதிர்காலத் திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் – கருத்து வெளியிட்டடோனி

536

‘குட்டி மாலிங்க’ என்னும் செல்லப் பெயருடன் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மதீஷ பத்திரனவின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவருமான எம்.எஸ். டோனி கருத்து வெளியிட்டுள்ளார்.

>> மதீஷவின் அற்புத பந்துவீச்சுடன் மும்பையை வீழ்த்தியது சென்னை

சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான IPL லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் அரங்கில் நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை 06 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருந்ததோடு, இப்போட்டி மூலம் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக IPL போட்டியொன்றில் சென்னை சுபர் கிங்ஸ் மும்பை வீரர்களை தமது சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்வதற்கு காரணமாக அமைந்த மதீஷ பதிரன வெறும் 15 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, அது பதிரனவின் சிறந்த ஐ.பி.எல். பந்துவீச்சு பெறுதியாகவும் மாறியது.

இந்த நிலையில் போட்டியின் பின்னர், போட்டியின் ஆட்ட நாயகனாகவும் மதீஷ பத்திரன தெரிவாகியிருந்தார். போட்டியின் பின்னர் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில், மதீஷ பத்திரனவின் பந்துவீச்சு குறித்து கருத்து வெளியிட்டதோடு, அவர் எதிர்காலத்தில் எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார்.

“மதீஷவினை நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைப்பதற்கு விரும்பவில்லை. அவர் ஐ.சி.சி. இன் அனைத்து தொடர்களிலும் ஆட வேண்டும் என நினைக்கின்றேன். அவர் இலங்கை அணியின் சொத்தாக வரும் காலத்தில் மாறுவார்.” என டோனி குறிப்பிட்டிருந்தார்.

>> அவுஸ்திரேலியா – தென்னாபிரிக்கா தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு

இலங்கை அணிக்காக இதுவரை ஒரேயொரு T20I போட்டியில் மாத்திரம் ஆடியுள்ள மதீஷ பதிரன இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாத ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் உடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இருதரப்பு தொடர் ஒன்றில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<