ICC டெஸ்ட் தரவரிசையில் பிரபாத், ரமேஷ் அதிரடி முன்னேற்றம்

923

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை வீரர்களான பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் ICC இன் டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சுழல் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தைப் பிடித்த பிரபாத் ஜயசூரிய, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

குறித்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக 32ஆவது இடத்தில் இருந்த ரமேஷ் மெண்டிஸ், அயர்லாந்து டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 22ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அயர்லாந்து அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசிய அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதிசிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி கன்னி இரட்டைச் சதம் விளாசி 245 ஓட்டங்களைக் குவித்த குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ICC இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையின்படி முறையே 22ஆவது மற்றும் 39ஆவது இடங்களில் தொடர்ந்து உள்ளனர்.

இதனிடையே, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சதங்களைக் குவித்த பாகிஸ்தான் வீரர் பகர் ஜமான், ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ICC இன் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்திலும், தென்னாபிரிக்காவின் ரஸ்ஸி வென் டெர் டுசென் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கும் சரிந்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<