வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இலங்கை கடற்படை

614

பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடர் 2023 இன் முதல் போட்டியில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழக அணியினர் 2-1 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை விமானப்படை அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளனர்.

இவ்வருடத்திற்கான பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடரின் ஆரம்பப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் புதன்கிழமை (03) இடம்பெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதல் விமானப்படை அணியினர் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றங்களை அதிகமாக மேற்கொண்டாலும், ஆட்டத்தின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் கடற்படை அணியினர் போட்டியின் முதல் கோலைப் பெற்றனர்.

அவ்வணிக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது, ஹஸ்மிர் உள்ளனுப்பிய பந்தினால் பின்கள வீரர் மனரம் பெரேரா எதிரணியின் கோல் பெட்டியின் எல்லையில் இருந்து பந்தை வேகமாக கோலுக்குள் செலுத்தி முதல் கோலைப் பதிவு செய்தார்.

மீண்டும் முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் தருவாயில், விமானப்படை பின்கள வீரர்கள் பந்தை தடுப்பதில் விட்ட தவறின்போது அதனைப் பெற்ற கடற்படை முன்கள வீரர் நாகுர் மீரா, கோல் காப்பாளர் றுவன் அருனசிறியைத் தாண்டி பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி, முதல் பாதியில் கடற்படை அணியை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.

இரண்டாம் பாதி ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து மீண்டும் கவுன்டர் அட்டக் முறையில் கோலுக்கான முயற்சிகளை விமானப்படை மேற்கொண்டது.

அந்த முயற்சிகளின் பலனான, இரண்டாம் பாதி ஆரம்பித்து 10 நிமிடங்கள் கடந்த நிலையில் UIS பெர்னாண்டோ, கடற்படை கோல் எல்லைக்கு வெளியில் இருந்து பந்தை வேகமாக கம்பங்களுக்குள் செலுத்தி அவ்வணிக்கான முதல் கோலைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து போட்டியின் இறுதி நிமிடம் வரை விமானப்படை வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்து கோலுக்கான முயற்சிகளை அடுத்தடுத்து மேற்கொண்டனர். எனினும், கடற்படையின் தடுப்பாட்டம் காரணமாக கோல்கள் எதுவும் பெறப்படவில்லை.

எனவே, போட்டி நிறைவில் 2-1 என வெற்றி பெற்ற கடற்படை வீரர்கள் தொடரில் தமது முதல் வெற்றியை பதிவு செய்தனர்.

தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும். அந்த மோதலில் தொடரின் நடப்புச் சம்பியன் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகத்தை இலங்கை கடற்படை வீரர்கள் எதிர்கொள்ளவுள்ளனர்.

முழு நேரம்: இலங்கை கடற்படை வி.க 2 – 1 இலங்கை விமானப்படை வி.க

கோல் பெற்றவர்கள்

இலங்கை கடற்படை வி.க – மனரம் பெரேரா, நாகுர் மீரா

இலங்கை விமானப்படை வி.க – UIS பெர்னாண்டோ

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<