இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நடத்தை விதிகளை மீறியதாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராத் கோஹ்லி மற்றும் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
IPL நடத்தை விதிகள் 2ஆம் நிலை மீறலுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக், அதே விதியின் முதல் நிலை (Leve-1) மீறலுக்காக தனது போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்தவுள்ளார்.
IPL தொடரில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.
இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது பாதியின் போது கோஹ்லி மற்றும் லக்னோ அணியின் வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கைலாகு செய்த போது பெங்களூர் அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இரு அணிகளையும் சேர்ந்த ஏனைய வீரர்கள் அவர்களை விலக்கிவிட்டு சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.
இந்த நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராத் கோஹ்லி மற்றும் கௌதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்து IPL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- RCB அணியில் இணையும் வர்ணனையாளர்
- த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்
- மார்ஷ், சோல்ட் அதிரடி வீண்; சன்ரைசர்ஸிடம் போராடித் தோற்றது டெல்லி
இது குறித்து IPL நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியின் போது, IPL நடத்தை விதிகளை மீறியதற்காக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராத் கோஹ்லி மற்றும் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது“ என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, விராத் கோஹ்லியின் முழு சம்பளமும், (இந்திய பணப்பெறுமதியில் 1.07 கோடி), கௌதம் கம்பீரின் முழு சம்பளமும் (இந்திய பணப்பெறுமதியில் 25 இலட்சம்) மற்றும் நவீன் உல் ஹக்கிற்கு போட்டியின் பாதி சம்பளமும் (இந்திய பணப்பெறுமதியில் 1.79 இலட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013இல் கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராகவும், விராத் கோஹ்லி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராகவும் இருந்தபோதும் இருவரும் மோசமான வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<