உலக பாடசாலை U9 செஸ் சம்பியனாகிய தெஹாஷ் கிரிங்கொட

World School Chess Championships 2023

257

கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை செஸ் சம்பியன்ஷிப் (2023) தொடரின் 9 வயதின் கீழ் திறந்த சுற்றுப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தெஹாஷ் ரித்மித கிரிங்கொட சம்பியனாக முடிசூடியுள்ளார்.

போட்டித்தொடர் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த நிலையில் மொத்தமாக 41 போட்டியாளர்களுக்கு மத்தியில் வெற்றிபெற்று தெஹாஷ் கிரிங்கொட சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

>> டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் சன்ரைசர்ஸ் வீரர்

சுவிஸ் முறைமையில் ஒன்பது சுற்றுக்களாக நடைபெற்ற இந்த செஸ் தொடரில், நேரக்கட்டுப்பாடாக 90 நிமிடங்கள் மற்றும் 30 செக்கன்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி கற்றுவரும் தெஹாஷ் 9 புள்ளிகளில் 7.5 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்கவைத்திருந்தார். தொடரின் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களை முறையே கஷகஸ்தானைச் சேர்ந்த அலிம்சான் ஷாவுன்பெய் மற்றும் எய்சுல்தான் பிசாலியாவ் ஆகியோர் பிடித்துக்கொண்டனர்.

தெஹாஷ் தான் விளையாடிய 9 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வியை சந்தித்திருந்தார். இஸ்ரேலைச் சேர்ந்த இடன் எஸ்கோலிடம் இவர் தோல்வியடைந்திருந்தார்.

அதேநேரம் தெஹாஷ் தன்னுடைய 4வது சுற்றுப்போட்டியில் எய்சுல்தான் பிசாலியாவ்  வெற்றிக்கொண்டதுடன், பனோர்மிட்ஸ் (கிரீஸ்), ஜுனி ஷாங் (இங்கிலாந்து), லூகஸ் டொரெஸ் (சுவீடன்), பொய்ரஷ் ஈப் அஷிக்ஷி (துருக்கி), சபருல்லாஹ்கான் சபீன் (இந்தியா) மற்றும் டுர்பட் டொட்முன்க் (மொங்கோலியா) ஆகியோரை வெற்றிக்கொண்டிருந்தார்.

இதேவேளை 8வது சுற்றில் தெஹாஷ் தோல்வியடைந்த பின்னர், சம்பியனாகுவதற்கு இறுதி சுற்றுப்போட்டியை சமப்படுத்துவதற்கான தேவை இருந்தது. அலிம்சான் ஷாவுன்பெயிடுடன் நடைபெற்ற 9வது சுற்றை இவர் சமப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<