மைதானத்தில் வைத்து கண்ணீர் சிந்திய லசித் மாலிங்க!

Indian Premier League 2023

1262

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க மைதானத்தில் வைத்து கண்ணீர் சிந்திய சம்பவம் ஒன்று தொடர்பில் மனந்திறந்துள்ளார்.

லசித் மாலிங்க IPL தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவருகின்றார். இந்த அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார செயற்பட்டு வருகின்றார்.

>> வோர்னரின் போராட்டத்தில் டெல்லி அணிக்கு முதல் வெற்றி 

இந்த நிலையில் குமார் சங்கக்கார மற்றும் லசித் மாலிங்க ஆகியோரை வைத்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நேர்காணல் ஒன்றை பதிவுசெய்து அவர்களுடைய யூடுப் பக்கத்தில் பதிவுசெய்திருந்தது. குறித்த நேர்காணலின் தொகுப்பாளராக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வீரரான ரியான் பராக் செயற்பட்டிருந்தார்.

இதன்போது சங்கக்கார மற்றும் மாலிங்கவிடம் போட்டியின் போது மைதானத்தில் அழுத சந்தர்ப்பங்கள் இருக்கிறன்றதா? என்ற கேள்வியை ரியான் பராக் எழுப்பியிருந்தார். இதன்போது குமார் சங்கக்கார இல்லை என்ற பதிலைக்கூறியதுடன், லசித் மாலிங்க மைதானத்தில் வைத்து அழுதிருக்கிறேன் என கூறியிருந்தார்.

தான் கண்ணீர் சிந்திய சம்பவம் தொடர்பில் லசித் மாலிங்க கூறுகையில், “நான் 2012ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசியிருந்தேன் என நினைக்கிறேன். ஆனால், இறுதிப்போட்டியில் சிறப்பாக பந்துவீசவில்லை.

இறுதிப்போட்டியில் என்னுடைய 4வது ஓவரில் 21 அல்லது 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தேன் என நினைக்கிறேன். மார்லன் சாமுவேல்ஸ் 3 சிக்ஸர்களை அடித்திருந்தார். நாம் போட்டியில் தோல்வியடைந்தோம். குறித்த சந்தர்ப்பத்தில் நான் உண்மையில் அழுதேன். நான் உலகக்கிண்ணத்தை தவறவிட்டதாக உணர்ந்திருந்தேன்” என்றார்.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற 2012ம் ஆண்டு T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<