ஜிம்பாப்வே அணிக்காக அண்மையில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட முன்னாள் இங்கிலாந்து மற்றும் யோர்க்ஷெயர் கழக வீரர் கேரி பேலன்ஸ், அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 வயதான கேரி பேலன்ஸ் 2014-2017 வரையான காலப்பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார், அங்கு அவர் 4 டெஸ்ட் சதங்களை அடித்தார்.
இதனிடையே, 2022ஆம் ஆண்டு இறுதியில் யோர்கஷெயர் கழகம் தனது ஒப்பந்தத்தில் இருந்து கேரி பேலன்ஸை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஜிம்பாப்வேயின் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தமாகினார்.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் அவர் ஜிம்பாப்வே அணிக்காக ஒரு டெஸ்ட், ஒரு T20i மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார், இதில் அவர் இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து (137) அசத்தினார். ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்று ஆடிய முதல் போட்டியிலேயே அவர் சதமடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதுமாத்திரமின்றி, இரண்டு நாடுகளுக்காக டெஸ்ட் சதம் அடித்த உலகின் இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையையும் கேரி பேலன்ஸ் நிகழ்த்தினார்.
ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்கும் இங்கிலாந்து வீரர்
இந்த நிலையில், தனது திடீர் ஓய்வு குறித்து கேரி பேலன்ஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
‘ஜிம்பாப்வேக்கான நகர்வு எனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியை அளிக்கும் என்று நான் நம்பினேன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காகவும், என்னை அவர்களின் அணியில் வரவேற்றதற்காகவும் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் இருப்பினும், நான் தொழில்முறை விளையாட்டில் என்னை அர்ப்பணிக்க விரும்பாத நிலையை அடைந்துவிட்டேன். அது ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கும், விளையாட்டிற்கும் பாதிப்பினை கொடுக்கும். எவ்வாறாயினும், ஜிம்பாப்வே அணி முன்னேற்றப் பாதையில் செல்ல வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த 33 வயது வீரரான கேரி பேலன்ஸ், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் போது, அவர் 24 டெஸ்ட் போட்டிகளில் 1,653 ஓட்டங்களையும், 21 ஒருநாள் போட்டிகளில் 454 ஓட்டங்களையும் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<