வாக்குரிமை கோரும் இலங்கையின் முன்னணி கால்பந்து கழகங்கள்

499

இலங்கையின் முன்னணி கால்பந்து தொடர்களான சுபர் லீக் மற்றும் சம்பியன்ஸ் லீக் தொடர்களில் ஆடும் கழகங்கள், இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான தேர்தலின் போது தமக்கும் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்வதற்கான முயற்சி ஒன்றை மேற்கொள்கின்றன.  

இலங்கை கால்பந்தின் கட்டமைப்பை மாற்றும் நோக்குடன் சுபர் லீக் மற்றும் சம்பியன்ஸ் லீக் கழகங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில்  தெளிவுபடுத்துவதற்கான ஒரு ஊடக சந்திப்பு திங்கட்கிழமை (10) கொழும்பு ரமதா ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான தேர்தலில் முன்னணி கழகங்களுக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்கின்றமை மற்றும் சம்மேளனத்தில் பதவிகளுக்கு அவர்கள் உள்வாங்கப்படுதல் என்பன தமது முக்கிய கோரிக்கையாக உள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுபர் லீக் தொடரில் ஆடும் வென்னப்புவ நியு யங்ஸ் கால்பந்து கழகத்தின் தலைவர் ரோஹித்த பெர்னாண்டோ, ”நாம் கழகங்களுக்கு இடையில் பல கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே இவ்வாறான ஒரு முன்னெடுப்பிற்கு வந்துள்ளோம். நாம் அனைவரும் ஒன்றாக ஒரே இலக்குடன், உடன்படிக்கையோடு பயணிக்கிறோம்.

இப்பொழுது பிபா மூலம் இலங்கை கால்பந்து சம்மேளனம் தடைக்குள்ளாகியுள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் இவ்வாறான முன்னெடுப்புக்களை எடுக்கும் போது எமது கழகங்களுக்கு தடை விதிக்கப்படலாம். அதேவேளை, இலங்கையின் விளையாட்டு சட்டங்களிலும் கால்பந்தின் சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இதுவே எமது கோரிக்கைகளுக்கு சிறந்த தருணமாக உள்ளது.

இதன் அடுத்த கட்டமாக நாம் நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் எமது கோரிக்கைகளையும் அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தி, அதன் பின்னர் பிபாவுடனும் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமக்கான வாக்குரிமையைப் பெற்றுக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என்றார்.

தங்களது கழகங்களுக்கு அனுசரணையாளர்களை பெற்றுத் தருவதற்காக இலங்கை கால்பந்து சம்மேளனம் இதுவரையில் எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்திய ரோஹித்த, தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் முன்னணி கழகங்கள் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு செய்யும் பட்சத்திலேயே நாட்டில் கால்பந்து விளையாட்டு அபிவிருத்தி அடையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தாம் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அமைச்சர் அதற்கு முழுமையான சம்மதத்தை தெரிவித்ததாகவும் ரோஹித்த மேலும் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தாம் லீக்களுக்கு தற்போது உள்ள வாக்குரிமையை இல்லாமல் செய்வதற்கு முயற்சிப்பதாக சில பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் தமக்கு அவ்வாறான எந்தவொரு நோக்கமும் இல்லை, தமது ஒரே நோக்கம் தமக்கும் வாக்குரிமையைப் பெற்றுக்கொள்வதே என்றும் குறித்த கழக அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஊடக சந்திப்பின்போது சுபர் லீக், சம்பியன்ஸ் லீக் கழகங்களின் முக்கிய உறுப்பினர்கள், இலங்கை தேசிய கால்பந்து அணிக்காக ஆடிய முன்னாள் வீரர்கள் அடங்கலாக பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<