IPL இல் மாலிங்கவை முந்தினார் யுஸ்வேந்திர சாஹல்

290
Yuzvendra Chahal

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று (05) குவஹாத்தியில் நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ஜிடேஷ் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கையின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான லசித் மாலிங்கவை பின்தள்ளி அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

IPL போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ முதலிடத்தைப் பிடித்துள்ளார். 161 IPL போட்டிகளில் ஆடியுள்ள அவர் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மொத்தமாக 133 IPL போட்டிகளில் ஆடி 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள யுஸ்வேந்திர சாஹல் 2ஆவது இடத்திலும், 122 போட்டிகளில் ஆடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள லசித் மாலிங்க 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

எனவே, IPL தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் முதலிடத்தில் உள்ள டுவைன் பிராவோவை பின்தள்ள யுஸ்வேந்திர சாஹலுக்கு இன்னும் 13 விக்கெட்டுகள் மாத்திரம் தேவைப்படுகின்றன.

இதேவேளை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல், T20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<