IPL தொடரிலிருந்து வெளியேறிய கேன் வில்லியம்சன்

Indian Premier League 2023

274
BCCI

சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது முழங்காலில் காயமடைந்த கேன் வில்லியம்சன், இம்முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.

அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக கேன் வில்லியம்சன் நாடு திரும்புவதாக இதுதொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது முழங்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது

இதனால், உடனடியாக மைதானத்தை விட்டு அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. எவ்வாறாயினும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய இன்னும் சில வாரங்கள் எடுக்கும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் எனவும், நியூசிலாந்துக்கு திரும்புவார் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டியில் முழங்கால் காயத்தினால், கேன் வில்லியம்சன் வெளியேறியதைத் தொடர்ந்து, காயம் குறித்த பரிசோதனைக்காக அவர் நியூசிலாந்து திரும்புவார். அவர் அடுத்த வாரம் நியூசிலாந்து திரும்புவதற்கும், சிகிச்சைத் திட்டத்தை நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுவதற்கும், இப்போது ஆயத்தங்கள் நடந்து வருகின்றன’ என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக பருவத்திலேயே சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. எனவே, இந்த ஆண்டும் சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் அணியின் பலத்தை வலுப்படுத்தும் விதமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது

எனினும், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே அவர் காயத்துக்குள்ளாகி வெளியேறியது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<