தொடர் விக்கெட்டுக்களால் இலங்கை இளம் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

488

சுற்றுலா இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியினை ஆப்கானிஸ்தான் 50 ஓட்டங்களால் வீழ்த்தி அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

T20 தொடரில் விட்ட தவறுகளை சரி செய்யுமா இலங்கை?

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது அங்கே இடம்பெற்ற முக்கோண இளையோர் ஒருநாள் தொடரினை அடுத்து, தற்போது ஆப்கான் அணியுடன் இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.

அந்தவகையில் தொடரின் முதல் போட்டி அபுதாபி டோலரன்ஸ் அரங்கில் நேற்று (01) ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கான் அணியினர் 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 232 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஆப்கான் துடுப்பாட்டம் சார்பில் அதன் ஆரம்ப வீரர்கள் இருவரும் அரைச்சதம் விளாசினர். இதில் வபியுல்லா ஸ்டானிக்சாய் 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் உடன் 67 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஜம்சித் சத்ரான் 57 ஓட்டங்களைப் பெற்றார். இவர்களோடு அணித் தலைவரான நூமான் சாஹ் 66 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கை இளம் அணியின் பந்துவீச்சில் மல்ஷ தருப்பதி 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், விஹாஸ் தேவ்மிக்க 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி செவோன் டேனியலின் அரைச்சதத்தோடு சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றதோடு, போட்டியிலும் தொடர்ந்து முன்னேறியது.

எனினும் ஒரு கட்டத்தில் ஆப்கான் இளம் வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மட் செவோன் டேனியலின் விக்கெட்டினை கைப்பற்றினார். இதனால் அரைச்சதம் விளாசிய செவோன் டேனியல் 61 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் உடன் 67 ஓட்டங்கள் எடுத்தார்.

டேனியலின் விக்கெட்டினை அடுத்து தடுமாற்றம் காணத் தொடங்கிய இலங்கை இளம் வீரர்களின் துடுப்பாட்டம் மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்றது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக இலங்கை வீரர்கள் தமது விக்கெட்டுக்களை இழந்தனர். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 169 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட இலங்கை அணி மிக மோசமான துடுப்பாட்டம் காரணமாக 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 182 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படு தோல்வி அடைந்தது.

சந்திமாலின் சதத்ததுடன் காலி அணிக்கு 4ஆவது வெற்றி

தமது இறுதி 07 விக்கெட்டுக்களையும் வெறும் 15 ஓட்டங்களில் பறிகொடுத்த இலங்கை இளம் அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானின் கலீல் அஹ்மட் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இதேநேரம் பாரிடூன் தாவுத்சாய் 2 விக்கெட்டுக்களை சுருட்டி ஆப்கானின் வெற்றிக்கு உதவியாக இருந்த ஏனைய வீரராக மாறினார்.

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர்கள் எவரும் இரு இலக்க ஓட்டங்களை கூட தாண்டியிருக்காத நிலையில் செவோன் டேனியலின் பின்னர் அதிக ஓட்டங்கள் பெற்ற மற்றைய இலங்கை வீரராக மாறிய சினேத் ஜயவர்தன 29 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இலங்கை இளம் கிரிக்கெட் அணி இரு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இன்று (02) இளையோர் ஒருநாள் தொடரினை தீர்மானிக்கும், இரண்டாவதும் இறுதியுமான போட்டி நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<