இலங்கை இராணுவத்தினால் 58ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (31) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.
இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இம்முறை போட்டித்தொடரில் 4 இலங்கை சாதனைகள், 15 போட்டிச் சாதனைகள் மற்றும் 8 இராணுவ மெய்வல்லுனர் போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
இந்த நிலையில், இம்முறை இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தமிழ் பேசுகின்ற வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி ரதுஷன் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 69.82 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தேசிய சம்பியனான சுமேத ரணசிங்கவை அவர் வீழ்த்தியிருந்ததுடன், தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியொன்றில் முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர், செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். மாகாண மட்டப் போட்டிகள் மற்றும் தேசிய இளைஞர் வேவைகள் போட்டித்தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த இவர், 2020ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார். அன்று முதல் தொடர்ச்சியாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வந்தாலும் அவரால் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 3ஆவது இடத்தைப் பிடித்த அவர், அண்மையில் நிறைவடைந்த இந்த ஆண்டுக்கான முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளில் பங்குகொண்டு 3ஆவது இடத்தைப் பிடித்தார்.
- புவிதரனின் இலங்கை சாதனையை முறிடித்தார் ஜனித்
- 200 மீட்டரில் புதிய சாதனை படைத்தார் அருண தர்ஷன
- ஆஸி. பாரா மெய்வல்லுனரில் தினேஷ், சமித்தவுக்கு பதக்கம்
இதனிடையே, இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் (டெகத்லன்) பங்குகொண்ட நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அஸான், 6894 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கம் வென்றார்.
10 அம்சப் போட்டிகளில் தேசிய சம்பியனான அஜித் கருணாதிலகவை அஸான் வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான டெகத்லன் மொஹமட் அஸான் 7,172 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கத்தை வென்றதுடன், குறித்த போட்டிப் பிரிவில் 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த இரண்டாவது இலங்கை வீரராக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கி படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 55.43 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.
ஏவ்வாறாயினும், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் களமிறங்கிய சண்முகேஸ்வரனுக்கு 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இராணுவ பீரங்கி படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான், 21.15 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.இதேவேளை, பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சபியா யாமிக் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 24.75 செக்கன்களில் ஓடி முடித்தார்.
இதேவேளை, பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சபியா யாமிக் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 24.75 செக்கன்களில் ஓடி முடித்தார்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<