வெற்றியுடன் தொடரில் முன்னேறும் குஜாராத் டைடன்ஸ்

200
Gujarat Titans vs Chennai Super Kings

சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் குஜாராத் டைடன்ஸ் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் முதல் போட்டியில், தொடரின் நடப்புச் சம்பியன்களான குஜாராத் டைடன்ஸ் 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>> IPL 2023 தொடரை தவறவிடும் நட்சத்திரங்கள்

குஜாராத் டைடன்ஸ் மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகள் இடையிலான ஐ.பி.எல். போட்டி நேற்று (31) இரவு அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜாராத் டைடன்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு வழங்கியது.

அதன்படி போட்டியில் முதலில் ஆடிய சென்னை வீரர்கள் ருத்துராஜ் கய்க்வாட்டின் அபார துடுப்பாட்டத்தோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்கள் குவித்தனர். சென்னை சுபர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கய்க்வாட் வெறும் 50 பந்துகளை எதிர்கொண்டு 9 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் அல்சாரி ஜோசேப், ரஷீட் கான் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் குஜாராத் டைடன்ஸ் அணிக்காக பந்துவீச்சில் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 179 ஓட்டங்களை குஜாராத் டைடன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 182 ஓட்டங்களுடன் அடைந்தது.

குஜாராத் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் வெற்றியினை உறுதி செய்ய காரணமாக அமைந்த சுப்மான் கில் தன்னுடைய 15ஆவது ஐ.பி.எல். அரைச்சதத்தோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக வெறும் 36 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காத ரஷீட் கான் 03 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 10 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ராஜ்வர்தன் ஹங்கரெக்கர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அவரது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக குஜாராத் டைடன்ஸ் அணியின் ரஷீட் கான் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

சென்னை சுபர் கிங்ஸ் – 178/7 (20) ருத்துராஜ் கய்க்வாட் 92(50), ரஷீட் கான் 26/2 (4), மொஹமட் சமி 29/2 (4), அல்சாரி ஜோசேப் 33/2(4)

குஜாராத் டைடன்ஸ் – 182/5 (19.2) சுப்மான் கில் 65(36), ராஜ்வர்தன் ஹங்ரேக்கர் 36/3(4)

முடிவு – குஜாராத் டைடன்ஸ் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<