இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 20.64 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் குறித்த போட்டிப் பிரிவில் அதிவேக காலத்தை இலங்கையில் பதிவு செய்த வீரராக அருண தர்ஷன புதிய சாதனை படைத்துள்ளார்.
58ஆவது இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், போட்டிகளின் 2ஆவது நாளான இன்று (30) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன, போட்டியை 20.64 செக்கன்களில் ஓடிமுடித்து முதலிடம் பிடித்தார்.
யுபுன் அபோகோனுக்குப் பிறகு 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அதிவேகமாகப் பதிவு செய்த இரண்டாவது காலப் பெறுமதி இதுவாகும். முன்னதாக கடந்த ஆண்டு இத்தாலியில் வைத்து யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 20.36 செக்கன்களில் ஓடிமுடித்து இலங்கை சாதனை படைத்திருந்தார்.
மேலும், 200 மீட்டர் ஓட்டப் போட்டிக்கான அதிவேக காலத்தை இலங்கையில் வைத்து பதிவு செய்த இலங்கை வீரராகவும் அருண தர்ஷன இடம்பிடித்தார். இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு வினோஜ் சுரஞ்சய 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 20.68 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கையில் பதிவான அதிவேக காலத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 2023 ஐ வெற்றியுடன் ஆரம்பித்த குமார் சண்முகேஸ்வரன்
- ஆசிய இளையோர் சம்பியன்ஷிப்பிற்கு இலங்கையிலிருந்து அறுவர் தகுதி
- அமெரிக்காவின் உயரம் பாய்தல் சம்பியனாகிய உஷான்
இதனிடையே, 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷனவின் தனிப்பட்ட அதிசிறந்த காலப் பெறுமதியாகவும் இது இடம்பிடித்தது. இந்த போட்டி நிகழ்ச்சியில் அவரது முந்தைய தனிப்பட்ட காலப் பெறுமதி 20.91 செக்கன்களாகும்.
அதுமாத்திரிமின்றி, ஆண்களுக்கான 200 மீட்டரில் இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான சாதனையையும் அவர் முறியடித்தார்.
இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வருகின்ற அருண தர்ஷன, கடந்த காலங்களில் அவ்வப்போது உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்தார். எவ்வாறாயினும், இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<