பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு ‘உளவியல் பாதுகாப்பை’ வழங்க முயற்சிப்பதாக பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த பங்களாதேஷ் அணி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற T20i தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்துக்கு எதிரான முதல் தொடரை கைப்பற்றியது.
மேலும், அயர்லாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றிய பங்களாதேஷ், அவ்வணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது T20i போட்டியிலும் வெற்றியீட்டியுள்ளது. அதேபோல அந்த அணியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒற்றை டெஸ்ட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷ் அணியை பயிற்றுவித்த முன்னாள் இலங்கை வீரரான சந்திக ஹத்துருசிங்க தான் பங்களாதேஷ் அணியின் சமீபகால இந்த வெற்றிகள் அனைத்திற்கும் பின்னால் முக்கிய நபராக இருந்தார்.
- இலங்கையின் வாய்ப்பை பறிக்க தென்னாபிரிக்காவின் பலமான குழாம்!
- பல சாதனைகளுடன் T20 அரங்கை அதிர வைத்த மோதல்
- ஜடேஜாவுக்கு அதி உயர் ஒப்பந்தம்; பாண்டியாவும் அதிரடி முன்னேற்றம்
இந்த நிலையில், பங்களாதேஷ் அணியை விட்டு வெளியேறி ஆறு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அதே அணியுடன் இணைந்த போதும், அணியில் பாரிய மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் வழங்கிய நேர்காணலில் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
”பங்களாதேஷ் அணியில் எதுவும் மாறவில்லை என்று நினைக்கிறேன். முன்பு இருந்த வீரர்கள் தான் அதே திறமையுடன் அணியில் உள்ளார்கள். மைதானத்தின் சூழ்நிலையும் நாங்கள் பேசிய விடயங்களும் கொஞ்சம் மாறியுள்ளன. அவர்கள் சாதித்தாலும் அல்லது சாதிக்காவிட்டாலும், அவர்களின் திறமையால் அவர்கள் நமக்கு மதிப்புமிக்கவர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி அவர்களைச் சுற்றி உளவியல் பாதுகாப்பை உருவாக்க நான் முயற்சிக்கிறேன்.
இங்கு மிக முக்கியமான விடயம் ‘உளவியல் பாதுகாப்பு’ என்ற வார்த்தை. முடிவுகள் மற்றும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் வீரர்கள் தங்களால் முடிந்ததைச் செய்யக்கூடிய சூழலை நாம் உருவாக்கினால், அதுவே அணி முகாமைத்துவத்தினால் செய்யக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம். மேலும், பங்களாதேஷ் அணியில் இருந்து ஆக்ரோஷமான கிரிக்கெட்டை பார்க்க விரும்புகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ”இதை ஒரு புதிய சகாப்தமாக நான் பார்க்கவில்லை. இப்படித்தான் எங்கள் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பினோம். நாங்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். நாங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு பக்கத்திலிருந்து பக்கமாக ஆடுகிறோம் என்று அர்த்தமல்ல. வார்த்தையின் நேரடி அர்த்தத்தில் ஆக்ரோஷமாக இருப்பது அவசியம். நாங்கள் அணியை தேர்வு செய்கிறோம், பந்தைப் பிடிக்க வீரர்களை உரிய இடத்தில் நிறுத்தல், உத்திகளை கையாளுதல், உடல் மொழியை பேணுதல் உள்ளிட்ட அனைத்தும் ஆக்ரோஷமாக செய்யப்படுகின்றன. எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடுவதே எமது நோக்கம். சுதந்திரமாக விளையாடும்போது நன்றாக விளையாடுவோம் என்று நினைக்கிறேன்” என்றார்.
இதேவேளை, இம்மாதம் 31ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள IPL தொடரில் பங்கேற்க லிண்டன் தாஸ், முஸ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகிய மூவரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அனுமதி வழங்கப்படவில்லை. தேசிய அணியில் தங்கள் பொறுப்புகளை முடித்த பிறகு குறித்த வீரர்கள் மூவரும் IPL தொடரில் இணைவார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை கடிதம் மூலம் பிசிசிஐ க்கு தெரிவித்திருந்தது. இதுதொடர்பில் ஹத்துருசிங்க பேசுகையில்,
”நாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பதுதான் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் முடிவு என்று நான் நினைக்கிறேன். மேலும் ஏலத்திற்கான பெயர்களை சமர்பிப்பதற்கு முன்பே இதுதொடர்பில் வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த வீரர்களுக்கு IPL விளையாடுவதன் மூலம் தங்கள் திறமையை நிச்சயம் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், தங்கள் நாட்டிற்காக விளையாடுவதே அவர்களின் முன்னுரிமை” என குறிப்பிட்டார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<