பிரான்ஸ் அணித் தலைவரானார் ம்பாப்பே

320

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கழகத்தின் இளம் முன்கள வீரரான கிலியன் ம்பாப்பே பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் அணித் தலைவராக இருந்த டொட்டன்ஹாம் கோல்காப்பாளர் ஹுகோ லொரிஸ் கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற நிலையிலேயே ம்பாப்பே தற்போது அந்தப் பதவிக்கு நிமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்துக்கு அறிமுகமான, தற்போது 24 வயதுடைய ம்பாப்பே பிரான்ஸ் அணிக்காக 66 போட்டிகளில் ஆடி 36 கோல்களை பெற்றுள்ளார்.

‘இந்தப் பொறுப்புக்கான அனைத்து தேவைகளையும் கிலியன் பூர்த்தி செய்திருக்கிறார்’ என்று பிரான்ஸ் அணி முகாமையாளர் டிடியர் டெஸ்சம்ப்ஸ், பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ம்பாப்பே அணித்தலைவராக நியமிக்கப்பட்டதையும் அட்லன்டிகோ மட்ரிட் அணியின் முன்கள வீரர் அன்டோனி கிரீஸ்மன் உப தலைவராக நியமிக்கப்பட்டதாக பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சமூக ஊடகத்தில் கடந்த செவ்வாயன்று (22) உறுதி செய்தது.

கடந்த ஆண்டு கட்டாரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அதிக கோல் பெற்றவராக பதிவான ம்பாப்பே பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் உதவினார். பிரான்ஸ் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவிடம் தோற்றது.

கடந்த 2018 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் குரோசியாவுக்கு எதிராக இரண்டு கோல்களை புகுத்திய அவர் பிரான்ஸ் அணி உலகக் கிண்ணத்தை வெல்ல உதவியதோடு தொடரின் சிறந்த இளம் வீரராகவும் விருது வென்றார்.

இந்நிலையில் பிரான்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை (25) 2024 யூரோ தகுதிகாண் போட்டிக்காக நெதர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணி திங்கட்கிழமை (27) அயர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தும்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<