மினோத், அஷேன் சதமடிக்க; அரைச் சதமடித்தார் மொஹமட் சமாஸ்

National Super League 2023

304
National Super League 2023

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் இன்று (17) நடைபெற்ற போட்டிகளில் தம்புள்ள மற்றும் காலி அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

இதில் கண்டி அணிக்கெதிரான போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றியீட்டிய மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணி இம்முறை போட்டித்தொடரில் ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்ய, காலி அணிக்கெதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளால் தோல்வியைத் தழுவிய தசுன் ஷானக தலைமையிலான கொழும்பு அணி தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை சந்தித்தது.

அதேபோல, இன்றைய நாள் போட்டிகளை பொருத்தவரை தம்;புள்ள அணித் தலைவர் மினோத் பானுக மற்றும் கொழும்பு அணியின் அஷேஷன் பண்டார ஆகிய இருவரும் சதங்களைப் பெற்றுக்கொள்ள, கண்டி அணியின் சந்துன் வீரக்கொடி, சஹன் ஆச்சிகே, கொழும்பு அணியின் சச்சித ஜயதிலக, காலி அணியின் மொஹமட் சமாஸ், தனன்ஜய லக்ஷான், பசிந்து சூரியபண்டார மற்றும் பெதும் குமார ஆகியோர் அரைச்சதங்களை பதிவுசெய்தனர்.

தம்புள்ள எதிர் கண்டி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சகலதுறையிலும் பிரகாசித்த தம்புள்ள அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பெதும் நிஸ்ஸங்க ஓட்டமின்றியும், லசித் குரூஸ்புள்ளே 2 ஓட்டங்களுடனும் லஹிரு சமரகோனின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த தனுக தாபரே (18) மற்றும் லஹிரு உதார (13) ஆகிய இருவரும் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர். எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய சந்துன் வீரக்கொடி மற்றும் அணித்தலைவர் சஹன் ஆரச்சிகே ஆகியோர அரைச் சதங்களின் உதவியுடன் கண்டி அணி, 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது.

>>NSL ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஜப்னா, தம்புள்ள

கண்டி அணி சார்பில் அதிகபட்சமாக சந்துன் வீரக்கொடி 75 பந்துகளில் 67 ஓட்டங்களையும், அணித்தலைவர் சஹன் ஆரச்சிகே 92 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ள அணியின் பந்துவீச்சை பொருத்தவரை லஹிரு சமரகோன் 4 விக்கெட்டுகளையும், நுவன் துஷார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள அணி அணித்தலைவர் மினோத் பானுகவின் அபார சதம் மற்றும் அபிஷேக் லியனாரச்சியின்  துடுப்பாட்டத்தின் உதவியுடன் 37.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

தம்புள்ள அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய மினோத் பானுக 15 பௌண்டரிகளுடன் 87 பந்துகளில் 104 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் லியனாரச்சி 61 பந்துகளில் 43 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 215 (47.5) – சந்துன் வீரக்கொடி 67, சஹன் ஆரச்சிகே 53, லஹிரு சமரகோன் 39/4, நுவன் துஷார 27/2, வனிந்து ஹஸரங்க 2/40

தம்புள்ள அணி – 219/3 (37.4) – மினோத் பானுக 104, அபிஷேக் லியனாரச்சி 43

முடிவுதம்புள்ள அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

கொழும்பு எதிர் காலி

தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொhழும்பு அணியின் தலைவர் தசுன் ஷானக, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கொழும்பு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீர்ர்களான நிபுன் தனன்ஜய மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் டக்அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்துவந்த குசல் பெரேராவை 17 ஓட்டங்களுக்கு தனன்ஜய லக்ஷான் ஆட்டமிழக்கச் செய்தார்.

4ஆம் இலக்கத்தில் களமிறங்கி சற்று நம்பிக்கை கொடுத்த சரித் அசலங்க 42 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும், 5ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அஷேன் பண்டார மற்றும் தசுன் ஷானக ஜோடி 82 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று ஓரளவு நம்பிக்கை கொடுத்தனர். இதில் 40 பந்துகளுக்கு முகங்கொடுத்து 48 ஓட்டங்களைப் பெற்றிருந்த தசுன் ஷானக, துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த சச்சித ஜயதிலகவுடன் 6ஆவது விக்கெட்டுக்கு மற்றுமொரு அரைச் சத இணைப்பாடமொன்றை அஷேன் பண்டார வழங்க, கொழும்பு அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்களை பெற்றது.

>>சதீரவின் அபார சதத்துடன் ஜப்னா அணிக்கு 2ஆவது வெற்றி

கொழும்பு அணியில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அஷேன் பண்டார 114 பந்துகளில் 101 ஓட்டங்களையும், பின்வரிசையில் களமிறங்கி வேகமாக ஓட்டங்களைக் குவித்த சச்சித ஜயதிலக 37 பந்துகளில் 67 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

காலி அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, டில்ஷான் மதுசங்க 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில் சற்று கடினமான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி அணிக்கு ஆரம்பத்தில் சொஹான் டி லிவேரா 21 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், மொஹமட் சமாஸ் (65), தனன்ஜய லக்ஷான் (61), பசிந்து சூரியபண்டார (53) மற்றும் பெதும் குமார (57) ஆகியோரது அடுத்தடுத்த அரைச் சதங்களின் உதவியுடன் காலி அணி, 47 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பந்துவீச்சில் தசுன் ஷானக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு அணி – 281/9 (50) – அஷேன் பண்டார 101, சச்சித ஜயதிலக 67, தசுன் ஷானக 48, டில்ஷான் மதுசங்க 2/58

காலி அணி – 282/3 (47) – மொஹமட் சமாஸ் 65, தனன்ஜய லக்ஷான் 61, பெதும் குமார 57, பசிந்து சூரியபண்டார 53*, தசுன் ஷானக 3/32

முடிவுகாலி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<