முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஷோன் மார்ஷ்

338

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷோன் மார்ஷ் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (10) அறிவித்திருக்கிறார்.

மேற்கு அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கிரிக்கெட் இவர், 2001ஆம் ஆண்டு தனது 17 வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

183 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 12032 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார். இதில் 32 சதங்களும் 58 அரைச் சதங்களும் அடங்கும். அதுமாத்திரமின்றி, மேற்கு அவுஸ்திரேலிய அணிக்காக 122 போட்டிகளில் ஆடி 20 சதங்களுடன் 8347 ஓட்டங்களைக் குவித்து அந்த அணி சார்பில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் தர கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதன் காரணமாக ஷெபில்ட் ஷீல்ட் தொடரில் மேற்கு அவுஸ்திரேலியாவின் சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கான எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார்.

இதேநேரம், தனது ஓய்வு குறித்து ஷோன் மார்ஷ் கருத்து வெளியிடுகையில், குறிப்பாக இந்த ஆண்டு மிகவும் கடினமாக இருந்தது. கடந்த ஆண்டு ஷெபில்ட் ஷீல்ட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நான் திட்டமிட்ட எதுவும் சிறப்பாக அமையவில்லை. மேற்கு அவுஸ்திரேலிய கழகத்துக்காக இன்னுமொரு சம்பியன் பட்டத்தை வெல்வேன் என்று மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் காயங்கள் காரணமாக எனது திட்டங்கள் நிறைவேறவில்லை.

இது ஒரு அற்புதமான பயணம், நான் 22 ஆண்டுகள் இங்கு இருப்பேன் என்று என் கனவில் கூட நினைத்ததில்லை. நான் கடந்து வந்த பாதை குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று அவர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளரும், டெஸ்ட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான தனது தந்தை ஜெப் மார்ஷுக்கு, அவர் சிறப்பு கௌரவத்தை செலுத்தினார்.

‘நான் சிறுவயதில் அப்பா விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குதான் கிரிக்கெட் விளையாட்டின் மீதான காதலை நான் கண்டேன். சிறு வயதிலிருந்தே, நான் அவரைப் போலவே இருக்க விரும்பினேன், அவர் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவர் கூறினார்.

2011ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட 39 வயதான ஷோன் மார்ஷ், அவுஸ்திரேலிய அணிக்காக இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2265 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும், 10 அரைச் சதங்களும் அடங்கும். இறுதியாக 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடினார்.

இதனிடையே, 2008ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவுஸ்திரேலியா அணிக்காக 73 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர், 2773 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 7 சதங்களும், 15 அரைச் சதங்களும் அடங்கும்.

2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணியின் மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப்பயணத்தின் போது  சர்வதேச T20I போட்டிகளில் அறிமுகமானார் ஷோன் மார்ஷ். 2016ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிரான T20I போட்டியில் அந்த அணிக்காக கடைசியாக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 15 சர்வதேச T20I போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 255 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதேவேளை, ஷோன் மார்ஷ் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், பிக் பேஷ் லீக் தொடரில் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி, இன்னும் ஒரு வருடம் அந்த அணிக்காக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<