தீர்மானமிக்க டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு இலங்கை என்ன செய்யும்?

413

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (09) கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகின்றது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மூவகை கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க T20i அணியின் புதிய தலைவராகும் மர்க்ரம்

இதில் முதலாவதாக இரு அணிகளுக்குமிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது வியாழக்கிழமை ஆரம்பமாகுகின்றது. குறிப்பாக, இலங்கை அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முக்கியத்தும் கொண்டதாக அமைகின்றது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் களநிலவரங்கள்

ஜூன் மாதம் இரண்டாவது பருவகாலத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகின்றது. இந்த இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக அவுஸ்திரேலியா ஏற்கனவே தெரிவாகியிருக்கும் நிலையில், இறுதிப் போட்டியில் விளையாடும் ஏனைய அணியாக மாறுவதற்கான வாய்ப்பு இலங்கை அல்லது இந்தியாவிற்கு காணப்படுகின்றது.

ஏனைய தொடர் முடிவுகளை தவிர்த்து இந்தியா ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாக அவர்கள் அவுஸ்திரேலிய அணியுடன் அஹமதாபாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 2-1 என முன்னிலை பெற்றிருக்கும் இந்தியா 3-1 என்ற தொடர் முடிவுடன் 62.5 என்கிற வெற்றி சதவீதத்தினைப் பெற்று, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டாவது அணியாக மாறும்.

இதேவேளை, இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடையும் போது அவர்களினால் வெற்றிச் சதவீதமாக 56.94 இணையே பெற முடியும். அதேநேரம் நான்காவது டெஸ்ட் போட்டியினை இந்தியா சமநிலைப்படுத்தும் போது அதிகபட்சமாக 58.79 இணையே வெற்றிச்சதவீதமாக பெற முடியும். எனவே இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாக நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவினை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியினை சமநிலைப்படுத்தும் போதோ அல்லது தோல்வியடையும் போதோ, இலங்கை அணிக்கு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு உருவாகும். இவ்வாறு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டால் இலங்கை நியூசிலாந்தினை இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வைட்வொஷ் செய்ய வேண்டும். இவ்வாறு வைட்வொஷ் செய்யும் போது இலங்கை 61.11 என்கிற வெற்றி சதவீதத்துடன் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியும்.

கடந்தகாலப் போட்டிகள்

கடந்தகால டெஸ்ட் போட்டிகளைப் பார்க்கும் போது நியூசிலாந்து அணி இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதனை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட்டின் ஊடக உரிமத்தை பெற்ற இந்திய நிறுவனம்

இலங்கை அணியினைப் பொறுத்தவரை இறுதியாக நியூசிலாந்தில் விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியினைச் சந்தித்திருக்கின்றது. இறுதியாக கடந்த 2006ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியொன்றிலும் இலங்கை அணி நியூசிலாந்தினை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியிருக்கின்றது. எனவே கடினமான சவால் ஒன்றே இலங்கை அணிக்கு நியூசிலாந்து மண்ணில் இம்முறை காத்திருக்கின்றது.

அணி போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை வெற்றி

%

நியூசிலாந்து 36 16 9 11 44.44
இலங்கை 36 09 10 11 25

இலங்கை அணி

கிறிஸ் சில்வர்வூட்டின் ஆளுகையில் நியூசிலாந்துக்கு முதல் தடவையாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு முன்னர் குறிப்பிட்டதனைப் போன்று நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் அதிக முக்கியத்துவம் கொண்டதாக காணப்படுகின்றது.

இதனை இலக்காகக் கொண்டு நியூசிலாந்து தொடருக்காக நுவரெலியாவில் மீள் நிர்மாணிக்கப்பட்ட ரதெல்ல அரங்கில் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, 2023ஆம் ஆண்டில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாகவும் நியூசிலாந்துடன் ஆடவுள்ள டெஸ்ட் தொடர் அமைகின்றது.

அதன்படி திமுத் கருணாரட்ன தலைமையிலான இலங்கை அணியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் காணப்படுகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து மண்ணில் அஞ்செலோ மெதிவ்ஸ் 55 இற்கு அதிகமான துடுப்பாட்ட சராசரியினைக் காட்டுவதோடு அங்கே, மெதிவ்ஸ் ஆறு இன்னிங்ஸ்களில் ஒரு சதம் அடங்கலாக 4 அரைச்சதங்களை விளாசியிருக்கின்றார். இது அவர் நியூசிலாந்தில் இலங்கை அணிக்காக தனக்கு கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்திலும் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றார் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

மறுமுனையில் குசல் மெண்டிஸ் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து மண்ணில் 50.85 என்கிற துடுப்பாட்ட சராசரியினை வெளிப்படுத்தியிருக்கின்றார். குசல் மெண்டிஸின் டெஸ்ட் போட்டி பதிவுகளைப் பார்க்கும் போது நியூசிலாந்து மண்ணில்  நான்கு இன்னிங்ஸ்களில் அபார சதமொன்றுடன் (141*) அரைச்சதமொன்றினையும் அவர் விளாசியிருக்கின்றார். அத்துடன் அண்மையில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் அவர் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை தினேஷ் சந்திமால், அணித்தலைவர் திமுத் கருணாரட்ன, தனன்ஞய டி சில்வா மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணிக்கு மேலதிக துடுப்பாட்ட பலமாக காணப்பட நிரோஷன் டிக்வெல்லவும் அணிக்கு மேலதிக நம்பிக்கை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பந்துவீச்சினைப் பொறுத்தவரை இலங்கை அணிக்கு பிரதான வேகப் பந்துவீச்சாளர்களாக விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித ஆகியோர் நம்பிக்கை வழங்க சுழல் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரியவும் சிறப்பாக செயற்பாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை எதிர்பார்ப்பு XI

திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, தனன்ஞய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, பிரபாத் ஜயசூரிய

நியூசிலாந்து அணி

இறுதியாக இங்கிலாந்து அணியுடன் விளையாடிய டெஸ்ட் தொடரினை சமநிலை செய்த நியூசிலாந்து அணி, குறித்த தொடரில் விளையாடிய அதே வீரர்கள் குழாத்துடன் இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்குகின்றது.

இரண்டாவது பருவகாலத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை ஏற்கனவே இழந்துவிட்ட போதும் நியூசிலாந்து அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியன்களாக இருப்பதோடு, அவ்வணி சொந்த மண்ணில் விளையாடிய இறுதி ஐந்து டெஸ்ட் தொடர்களிலும் சிறந்த முடிவினையே காட்டியிருக்கின்றது. எனவே நியூசிலாந்து தமது விருந்தினர்களான இலங்கை அணிக்கு சவாலாக இருக்கும் என்பதனை மறுக்க முடியாது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்டவீரர் கேன்  வில்லியம்சன் ஆடுவது முன்னதாக சந்தேகம் எனக் கூறப்பட்டிருந்த போதும் அவர் விளையாடுவது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, கேன் வில்லியம்சன் இலங்கையுடன் நடைபெறும் போட்டியில் அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர்களில் முதன்மையானவராக காணப்படுகின்றார்.

கேன் வில்லியம்சன் தவிர்த்து டொம் லேதம், டொம் பிளன்டல், ஹென்ரி நிக்கோல்ஸ் மற்றும் டெவோன் கொன்வெய் ஆகியோர் நியூசிலாந்து அணியின் ஏனைய துடுப்பாட்ட நம்பிக்கையாக காணப்பட அணியின் பந்துவீச்சு நம்பிக்கையாக டிம் சௌத்தி, நெயில் வெக்னர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் மைக்கல் பிரஸ்வெல் ஆகியோர் காணப்படுகின்றனர்.

எதிர்பார்ப்பு XI

டிம் சௌத்தி (தலைவர்), டொம் பிளன்டல், மைக்கல் பிரஸ்வெல், டெவோன் கொன்வெய், மேட் ஹென்ரி, டொம் லேதம், டேரைல் மிச்சல், நெயில் வெக்னர், ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<