இங்கிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் 146 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இரண்டாவது அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றதுள்ளது. முன்னதாக, 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் வென்ற அணி என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றிருந்தது.
டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் வெற்றி, 10 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி, இரண்டரை நாட்களில் வெற்றி, சமநிலையில் முடிந்த போட்டி என்ற வார்த்தைகளையே நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அணியின் சாதனை, வீரர்களின் சாதனைகளே பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் பேசு பொருளாகி வரும் நிலையில் அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளிலும் பல விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் விருந்து படைத்தது. ஏனென்றால், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது.
எனவே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அல்லது த்ரில் வெற்றிகளைப் பதிவு செய்த அணிகளின் பட்டியலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் (1993)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டிய அணியென்ற பெருமை மேற்கிந்திய தீவுகளையே சாரும். 1993ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
இதில் அடிலெய்ட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 252 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 213 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 39 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
இதையடுத்து 186 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக களமிற்கிய அவுஸ்திரேலியா அணி, 74 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய நிலையில், ஐஸ்டின் லாங்கர் நிதானமாக ஆடி வெற்றிக்காக போராடினார். அவருடன் 10ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிம் மேவும் தனது பங்கிற்கு அவுஸ்திரேலிய அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடினார். எனினும், 184 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது.
>>டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மோதலில் இலங்கை – இந்தியா!
இதன் மூலம் 13 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் தொடரை இழக்காத அப்போதைய சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி தக்க வைத்துக் கொண்டது.
அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (2005)
கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2ஆவது டெஸ்ட் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணிக்கு 282 ஓட்டங்களை இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 137 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
இங்கிலாந்து அணியின் வெற்றி எளிதாகிவிடும் எனக் கருதப்பட்ட நிலையில் ஷேன் வோர்ன் உள்ளிட்ட அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியினருக்கு துடுப்பாட்டத்தில் நெருக்கடி கொடுத்தனர். இதில் ஷேர்ன் வோர்ன், பிரட் லீ ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 220 வரை கொண்டு சென்றனர். எனினும், அண்ட்ரூ பிளிண்டொப்பின் பந்துவீச்சில் 42 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஷேன் வோர்ன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 10வது விக்கெட்டுக்கு பிரெட் லீயுடன் மைக்கல் காஸ்பரோவிச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி அவுஸ்திரேலியா அணியை வெற்றியின் விழப்பு வரை அழைத்துச் சென்றனர். எனினும் துரதிஷ்டவசமாக அணியின் ஓட்ட எண்ணிக்கை 279ஆக இருந்தபோது ஸ்டீவ் ஹார்மிசன் பந்துவீச்சில் மைக்கல் காஸ்பரோவிச் ஆட்டமிழ்ந்தார். இதனால் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா (2012)
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் டர்பனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
திமுத் கருணாரத்ன இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்று ஆடிய முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். டேர்பன் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி தமது முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களைக் குவிக்க, பதிலுக்கு ஆடிய இலங்கை வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களையே பெற்றனர். 44 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி 259 ஓட்டங்களை எடுத்தது. இதனால் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 304 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வெற்றி இலக்கினை அடைய இலங்கை அணிக்கு நான்காவது நாளில் இன்னும் 221 ஓட்டங்கள் தேவைப்பட்டது. குசல் பெரேராவுடன் அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றினை புரிந்த ஓஷத பெர்னாண்டோ 37 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த நிரோஷன் திக்வெல்ல டக்அவுட் ஆகியும் டேல் ஸ்டெய்னின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 110 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியிருந்தது.
தொடர்ந்து வந்த தனன்ஜய டி சில்வா குசல் பெரேராவுடன் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்காக 96 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிர்ந்து வலுச்சேர்த்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். எனினும், தனன்ஜய டி சில்வா 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த 3 வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியின் விளிம்பில் காணப்பட்டது.
இந்த தருணத்தில் இலங்கை அணிக்காக களத்தில் நின்ற குசல் பெரேரா, இலங்கை அணியின் இறுதி துடுப்பாட்ட வீரர் விஷ்வ பெர்னாந்துவுடன் இணைந்து போராட்டத்தை தொடங்கினார். தனக்கு கிடைத்த வாய்ப்புக்களில் எல்லாம் ஓட்டங்கள் குவித்த குசல் பெரேரா தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். குசல் பெரேரா பெற்ற இந்த சதத்தின் காரணமாக போட்டி மிகவும் விறுவிறுப்பாக மாறியது.
அதேவேளை விஷ்வ பெர்னாந்துவும் தனது விக்கெட்டினை பறிகொடுக்காமல் குசல் பெரேராவுக்கு ஒத்தாசையாக இருக்க, இலங்கை அணியின் கடைசி விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த இணைப்பாட்டத்தினால் இலங்கை அணி 85.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டினால் வரலாற்று வெற்றியினைப் பதிவு செய்தது.
>>நியூசிலாந்துக்கு வரலாற்று வெற்றி
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை 2க்கு 0 என டெஸ்ட் தொடரை வென்றதுடன், தென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாகவும் மாறியது.
துடுப்பாட்டத்தில் தனித்து நின்று போராடிய குசல் பெரேரா 150 ஓட்டங்களைக் கடந்தார்.
இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா (2019)
கடந்த 2019ஆம் அண்டு அவுஸ்திரேலியா அணிக்கெதிராக ஹெடிங்லியில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அதிரடியால் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றியீட்டியது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 179 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததோடு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 67 ஓட்டங்களுக்கு சுருண்டு அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 359 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு போட்டியின் நான்காவது நாளில் ஒரு விக்கெட் மாத்திரம் எஞ்சி இருக்கும்போது 73 ஓட்டங்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது பென் ஸ்டோக்ஸ் கடைசி வீரரான ஜெக் லீச் உடன் இணைந்து ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பினார். ஆறு வாரங்களுக்கு முன் லோர்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் செய்த அதே சாகசத்தை இந்தப் போட்டியிலும் அவர் நிகழ்த்திக் காட்டினார்.
நேதன் லையனின் ஓப் ஸ்பின் பந்துகளுக்கு மூன்று சிக்ஸர்களை விளாசிய பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் ஹேசல்வுட்டின் வேகப்பந்துக்கு தொடர்ச்சியாக ஒரு பௌண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதன்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 8 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.
வெற்றி பெறுவதற்கு இன்னும் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது பென் ஸ்டோக்ஸின் கடினமான பிடியெடுப்பொன்றை மார்கஸ் ஹரிஸ் தவறவிட்டார். பின்னர் அடுத்த ஓவரில் ஜெக் லீச் ரன் அவுட் ஆகும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணி தவறவிட்டது.
>>மாற்றங்களின்றி இலங்கையினை எதிர்கொள்ளும் நியூசிலாந்து டெஸ்ட் குழாம்
அடுத்த ஓவரில் ஜெக் லீச் தடுமாற்றத்துடன் ஒரு ஓட்டத்தை பெற போட்டி சமநிலை பெற்றது. பின்னர் அடுத்த பந்தை முகம்கொடுத்த பென் ஸ்டோக்ஸ் அதனை பௌண்டரிக்கு செலுத்தி அந்த அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வர பென் ஸ்டோக்ஸ் உதவினார்.
இதன்போது 219 பந்துகளுக்கு முகம்கொடுத்த பென் ஸ்டோக்ஸ் 11 பௌண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இங்கிலாந்து அணி 359 ஓட்ட வெற்றி இலக்கை எட்டியது அந்த அணியின் சாதனையாகும். இதற்கு முன்னர் 1928 இல் 332 ஓட்ட வெற்றி இலக்கை எட்டியதே கடந்த 91 ஆண்டுகளாக சாதனையாக இருந்து வந்தது.
இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து (2023)
பரபரப்பான முறையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டை ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் பலோ ஓன் ஆன பிறகு டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த 4ஆவது அணி என்ற சாதனையை அவ்வணி படைத்ததுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிநடை போட்டு வரும் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தியுள்ளது.
முதல் டெஸ்டை இங்கிலாந்து அணி வென்ற நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 435 ஓட்டங்களை எடுத்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறுத்த, நியூசிலாந்து அணி 209 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் ‘பலோ ஓன்’ முறையில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. கேன் வில்லியம்சன் (132), டொம் பிளெண்டல் (90) கைகொடுக்க 483 ஓட்டங்களைக் குவித்தது.
258 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 48 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்த நிலையில், போட்டியின் கடைசி நாளில் நியூசிலாந்தின் வேகப் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பிறகு ஜோ ரூட்டும், பென் ஸ்டோக்ஸும் நிதானமாக ஆடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தினர். ஆனால், நீல் வோக்னர் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஜோ ரூட்டை 95 ஓட்டங்களிலும், பென் ஸ்டோக்ஸை 33 ஓட்டங்களிலும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 215 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் சூடு பிடித்தது.
கடைசியில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், கைவசம் ஒரு விக்கெட் என்ற நிலையில் வோக்னர் லெக் திசையூடாக பந்தை வீசி ஜேம்ஸ் ஆண்டர்சனை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால், 2ஆவது இன்னிங்ஸில் வெற்றி இலக்குக்கு அருகில் சென்று 256 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதியில் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1–1 என சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<